உலகக்கோப்பை வென்ற சந்தோஷத்தில் இந்திய அணி திளைத்துக் கொண்டிருந்த தருணத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் விராட் கோலியின் பேட்டிங் குறித்து தனது விமர்சனத்தை கூறியிருந்தார்.
தற்போது சஞ்சய் மஞ்சுரேக்கரின் கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரரான மிஸ்பா உல்ஹக் அதற்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்திலேயே முக்கிய மூன்று விக்கெட்டுகளை பறி கொடுத்தது. இக்கட்டான சூழ்நிலையில் விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்த அக்சார் பட்டேல் ஒரு முனையில் அதிரடியாக விளையாட, மறுமுனையில் நங்கூரம் போல் நினைத்து நின்ற விராட் கோலி சிங்கிள் ரொட்டேட் செய்து கொண்டும், தேவையான நேரத்தில் பௌண்டரிகளை அடித்துக் கொண்டும் இருந்தார்.
அந்த போட்டியில் மொத்தமாக 76 ரன்கள் குவித்து இந்திய அணி 176 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தார். இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரர் ஆன சஞ்சய் மஞ்சுரேக்கர் ஒருவேளை இந்திய அணி தோற்று இருந்தால் விராட் கோலி கடுமையான விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கும். பேட்டிங்கில் மெதுவாக விளையாடினார் என்றும் பந்துவீச்சாளர்கள் தான் இந்திய அணியை காப்பாற்றினர் என்றும் தனது விமர்சனத்தை கூறியிருந்தார்.
தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான மிஸ்பா உல்ஹக் விராட் கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது ” இதில் நான் முக்கியமாக ஒரு விஷயத்தை கூற வேண்டும். விராட் கோலி 37 பந்துகளில் அரை சதம் அடித்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறலாம். ஆனால் 37 பந்துகளில் அவசரமாக அரை சதம் அடித்து ஒருவேளை விராட் கோலி ஆட்டம் இழந்து இருந்தால் அது இந்திய அணிக்கு வேறு மாதிரியான முடிவை கொடுக்க வாய்ப்புள்ளது.
இந்த சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது விராட் கோலி அதிரடியாக விளையாடியிருந்தால் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறி இருக்கும். ஆனால் அந்த சமயத்தில் போட்டி இரண்டு பக்கமும் இருந்தது. இந்திய அணி இந்த போட்டியில் 170 ரன்கள் குவித்தது. அவர்கள் ஆரம்பத்தில் 190 ரன்கள் மேல் குவிக்க போய் அவசர அவசரமாக விளையாடி 140 முதல் 150 ரன்களுக்காகவே ஆட்டம் இழந்திருக்கலாம்.
இதையும் படிங்க:பும்ரா மாறி வரணும்னா இத பண்ணுங்க.. மக்கள் உங்கள 20 வருஷத்துக்கு மறக்க மாட்டாங்க.. அறிவுரை கூறிய வாசிம் அக்ரம்
ஆனால் இந்திய அணி தற்போது அதன் சூழ்நிலையை அறிந்து அபாரமாக விளையாடியது. அதன் காரணமாகவே இந்திய அணி தற்போது இந்த போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது” என்று மிஸ்பா உல்ஹக் கூறியிருக்கிறார்.

