கிரிக்கெட்டில் பீல்டிங்கில் தனிச்சிறப்பு வாய்ந்த வீரர்களில் ஜான்டி ரோட்ஸ், யுவராஜ் சிங் வரிசையில் சுரேஷ் ரெய்னா நிச்சயமாக தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடிப்பார்.
ரெய்னா ஃபீல்டிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங் மற்றும் இக்கட்டான நேரத்தில் பகுதி நேர பந்து வீச்சு என்று ஆல் ரவுண்டர் திறமைகளை உள்ளடக்கியவர்.
மகேந்திர சிங் தோனியால் கண்டறியப்பட்ட சிறந்த வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் தோனியுடன் விளையாடியது மட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனியின் செல்லப் பிள்ளையாக இருந்தார்.தோனியை ‘தல’ என்று ரசிகர்கள் அழைத்தால் இவரை ‘சின்னதல’ என்று அழைப்பதுண்டு. அந்த அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கும், இவருக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு எப்போதும் உண்டு.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் சுரேஷ் ரெய்னா அவ்வப்போது வர்ணனையாளராகவும், சமூக வலைதளங்களிலும் தனது தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கிளப் தொடர்களில் விளையாடி வரும் சுரேஷ் ரெய்னாவிடம் சமீபத்தில் எடுத்த ஒரு பேட்டியில் டெத் ஓவர்களில் சிறந்த பவுலர் யார்? தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பேட்ஸ்மேன் யார்? எல்லா காலங்களிலும் சிறந்த வீரர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு சுவாரசியமாக பதில் அளித்த சுரேஷ் ரெய்னா, டெத் ஓவர்களில் பும்ராவை சிறந்த பந்துவீச்சாளர் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர் வரிசையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக் ஹசியை கூறி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் எல்லா காலங்களிலும் சிறந்த வீரராக ரெய்னா மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்து இருக்கிறார். ரெய்னாவின் இந்த பதில் தற்போது சிஎஸ்கே ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. எல்லா காலங்களிலும் சிறந்த வீரராக மகேந்திர சிங் தோனியை ரெய்னா தேர்வு செய்தது ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலேயே அமைந்துள்ளது.
இதையும் படிங்க:இளைஞர்களுக்கு இந்த மூவரும் ஒரு முன் உதாரணம்.. டிராவிட்டை இப்படி நான் பார்த்ததே இல்லை- லட்சுமணன் பேட்டி
ஏனென்றால் ஐசிசி தொடர்களில் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்று கொடுத்த மகேந்திர சிங் தோனி பேட்டிங் ஆர்டரில் இந்திய அணிக்காக மிடில் வரிசையில் களமிறங்கி நிறைய போட்டிகளை வென்று கொடுத்தவர். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்த சீசன் பெரும்பாலும் கடைசி சீசனாக இருக்கவே வாய்ப்புள்ளது. இவரது சாதனை இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் பேசப்படும். இந்த ஆண்டு தோனி கேப்டன் பதவியை விட்டு விலகிய நிலையில் இளம் வீரர் ருத்ராஜ் சிஎஸ்கேவின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

