இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் சூரியகுமார் யாதவ் ஆட்டமிழந்த விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 171 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு இந்திய அணி விளையாட ஆரம்பித்தது. இந்திய அணி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் சூரியகுமார் யாதவ் பவுண்டரி மற்றும் சிக்ஸர் என ஆரம்பித்து நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு மார்க் வுட் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து தேவையில்லாமல் தனது விக்கெட்டை இழந்தார்.
இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தற்போது அதிரடியாக விளையாடும் பாணியே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆட்டத்தின் சூழ்நிலை எப்படி இருந்தாலும் களம் இறங்கும் வீரர்கள் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடக்கூடிய அணுகு முறையை பின்பற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இந்திய பேட்டிங்கில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் எனவும் சூர்யகுமார் யாதவ் குறித்தும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒரு சில சமயங்களில் சூர்யகுமார் யாதவ் எளிதாக ஆட்டம் இழந்து சென்று விடுகிறார். முதலில் எந்த சமயத்தில் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்கிற தெளிவான அணுகுமுறை இருக்க வேண்டும். மேலும் அதற்கு சரியான பந்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த சகாப்தத்தில் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கு அடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நீங்கள் அதற்கு தகுதியானவர் என்று கருதினாலும் எல்லா நேரத்திலும் அப்படி விளையாடுவது சாத்தியமாகாது.
இதையும் படிங்க:விராட் கோலி செய்வது குழந்தைத்தனமா இருக்கு.. நிதீஷ் குமார் ரெட்டிக்கு செஞ்சத ஏன் அவருக்கு செய்யல – சுனில் கவாஸ்கர் கேள்வி
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் கூட நிச்சயம் அவர்கள் திரும்பி வருவார்கள். ஏனென்றால் அவர்கள் ஒரே மாதிரியான ஆட்டத்தை விளையாடுபவர்கள் அல்ல. மேலும் சூரிய குமார் யாதவ் சில மாற்றங்கள் செய்தாக வேண்டும். முதலில் ஒரு 15 பந்துகள் எதிர் கொண்டு விளையாட வேண்டும். மேலும் மைதானத்தின் பவுண்டரி அளவுகளை பார்த்து காற்று அடிக்கும் திசையில் விளையாட வேண்டும். இதை அவரால் நிச்சயமாக செய்ய முடியும்” என்று கூறியிருக்கிறார்.

