நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது. மேலும் சென்னை அணி தோற்க அணியின் திட்டங்கள்தான் காரணம் என்று சிஎஸ்கேஅணி முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறி இருக்கிறார்.
ஹைதராபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டம் இழந்த நிலையில்,மிடில் ஓவர்களில் களமிறங்கி அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த தூபே நான்கு சிக்ஸர்களை பறக்க விட்டார். இதனால் அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தொடும் என்ற நிலையில் எதிர்பாராத விதமாக சிவம் தூபே ஆட்டம் இழந்தார்.
எனவே அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடக் கூடிய மொயின் அலி அல்லது சமீர் ரிஸ்வி இவர்களில் ஒருவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில், எதிர்பாராத விதமாக ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். ஜடேஜா பெரும்பாலும் தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடக்கூடிய வீரர் இல்லை. அவர் பந்துகளை ரொட்டேட் செய்து கடைசியில்தான் அதிரடியாக விளையாடுவார்.
மேலும் நேற்றைய போட்டியில் ஆடுகளம் மெதுவாக இருந்ததால், அவரால் 23 பந்துகளில் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அவர் பந்துகளை சிறிது வீணடித்ததால் கடைசியாக அதிரடியாக விளையாடக்கூடிய மகேந்திர சிங் தோனிக்கும் மூன்று பந்துகளே கிடைத்தது. இதன் காரணத்தால் சென்னை அணி வலுவான சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 165 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
மேலும் பந்து வீச்சிலும் முதலில் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தாமல் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி தொடக்கத்திலேயே ரன்களை வாரி வழங்கியதால் சென்னை அணியால் கடைசி வரை மீண்டு வர முடியவில்லை. எனவே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சில சறுக்கல்களைக் கொண்டிருக்கும் சென்னை அணி மீது தற்போது விமர்சனங்கள் எழத் தொடங்கி இருக்கிறது.
எனவே இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான மேத்யூ ஹைடன் கூறும்பொழுது
“சிவம் தூபே மிடில் ஆர்டர்களில் களம் இறங்கி சிறப்பாக விளையாடி இரண்டு பெரிய சிக்சர்களை விளாசினார். அதேபோல ரவீந்திர ஜடேஜா மற்றும் ருத்ராஜ் ஆகியோர் அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்தேன்.ஆனால் அவர்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதே நேரத்தில் நேற்று ஜடேஜாவிடம் எதிர்பார்க்கப்பட்ட ஃப்ளோ இல்லை.
இதையும் படிங்க:எல்லை மீறிய SRH ரசிகர்கள்.. எதுக்கு இவ்வளவு வன்மம்.. சிஎஸ்கே ரசிகர்கள் கடும் அதிருப்தி.. காரணம் என்ன
அந்த நேரத்தில் அதிரடியாக விளையாடுவதற்கு மொயின் அலி சரியான வீரராக இருப்பார் என்று நான் நினைத்தேன். ஆனால் களம் இறங்கிய ஜடேஜா அந்த வேகத்திற்கு சரியாக விளையாடவில்லை” என்று கூறி இருக்கிறார்.

