அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தற்போது ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தியுள்ளது.
ஐசிசி தொடரைப் பொறுத்தவரை இந்திய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. ஆனால் அதற்குப் பிறகு தற்போது வரை ஒரு ஐசிசி கோப்பையையும் இந்தியாவில் வெல்ல முடியவில்லை. அதற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டுக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்த காலமே பொற்காலம் என்று சொல்லலாம். 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, டெஸ்ட் அணியை நம்பர் ஒன் இடத்தில் வைத்தது, 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என இந்திய அணிக்கு தோனி ஏராளமான கோப்பைகளை வென்று கொடுத்தார்.
அதற்குப் பிறகு அவர் கேப்டன் பதவியை விட்டு வெளியேறியதில் இருந்து ஒரு ஐசிசி கோப்பையை கூட இந்தியாவால் வெல்ல முடியவில்லை. விராட் கோலி கேப்டனாக இருந்த போதும் தொடர்ந்து சோகக் கதை தற்போது ரோஹித் சர்மாவின் கேப்டன்சியிலும் நீடிக்கிறது. கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அற்புதமான வாய்ப்பு இருந்தது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்து பரிதாபமாக கோப்பையை தவறவிட்டது. இந்த நிலையில் இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வெல்லாததற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார். இது குறித்து பாண்டிங் விரிவாக கூறும்பொழுது
“ஐசிசி தொடர்களில் விளையாடும் போது முதலில் உங்கள் மனதினை தெளிவாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கையில் என்ன பணி இருக்கிறது என்பதை தவிர அதை தாண்டி வெளியே வேறு எதைப் பற்றியும் யோசிக்க கூடாது. வெளியே இருந்து வரும் அழுத்தம் குறித்து கவலை கொள்ள கூடாது. இந்திய அணியின் திறமை குறித்து எந்த சந்தேகமும் இல்லை. உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் அது எளிதான காரியமும் கிடையாது. இந்திய அணி தன் மனதில் உள்ள விஷயங்களைப் படித்து நெருக்கடிகளை எப்படி கையாள்வது என்று கற்க வேண்டும்.
இதையும் படிங்க:விராட் கோலி பேட்டிங்கில் மட்டுமல்ல.. இதுலயும் கிங் நம்பர் ஒன்.. பாகிஸ்தான் பார்த்து கத்துக்கணும்.. ஹபீஸ் பேட்டி
நெருக்கடியை எப்படி சமாளிக்கிறீர்கள் என்பதை வைத்துத்தான் டி20 போட்டியில் வெற்றியும், தோல்வியும் உள்ளது. டி20 உலக கோப்பையில் இந்திய அணி இந்த முறை குரூப் ஏ பிரிவில் உள்ளது. இந்த பிரிவில் வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள நேரிடும். இந்திய அணி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள நேரிடும் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

