இந்திய அணி ஆஸ்திரேலியாலின் சுற்றுப்பயணம் செய்து பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றிருக்கிறது. மேலும் இரு அணிகளுக்குமிடையேயான மூன்றாவது பிரிஸ்பேன் டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.
இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரும் சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. மேலும் நீண்ட காலமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்ததால் தற்போது ஓய்வு பெறுவதாக அஸ்வின் தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அஸ்வின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடும் லெவனில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனுபவ வீரரான அஸ்வினை இந்திய அணி நிர்வாகம் ஒதுக்குவதாகவும் ஒரு கருத்து நிலவி வந்தது. இந்நிலையில் அஸ்வின் ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருப்பது பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினின் தந்தை கூறிய கருத்து சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அஸ்வினை இந்திய அணியின் நிர்வாகம் தொடர்ந்து அவமானம் செய்து வருகிறது. மேலும் அஸ்வினால் எவ்வளவு காலம் தான் பொறுத்துக் கொள்ள முடியும். அதனால் தான் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்திருக்கிறார் என தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இது கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் வீரர்களுக்கு ஆதரவாக அவர்களது தந்தைகள் வெளியிடும் அறிக்கை சமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்போது அஸ்வினின் தந்தை கூறிய கருத்தும் கிரிக்கெட் உலகிலும் ரசிகர்களிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது தந்தையின் கருத்திற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்திருக்கிறார். இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அஸ்வின் எனது தந்தைக்கு மீடியாக்களை எவ்வாறு கையாள்வது என்று தெரியாது. அவரை மன்னித்து விடுங்கள். “என்னப்பா இதெல்லாம்.? எல்லா அப்பாக்களும் பின்பற்றும் அதே ரூட்ட நீங்களும் பாலோ பண்ணுவீங்கன்னு நினைக்கல” உங்க எல்லாரையும் கெஞ்சி கேட்டுக்கிறேன் எங்க அப்பாவ மன்னித்து விடுங்கள் என பதிவு செய்துள்ளார்.
கடந்த 2014ஆம் வருட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தனது ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தோனியின் மாணவரான ரவிச்சந்திரன் அஸ்வினும் தோனியின் வழியை பின்பற்றி ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே தனது ஓய்வை அறிவித்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

