இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பிரதானமாக கருதப்படுவது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளாகும். இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்படுவதை பொறுத்தே தேர்வு செய்யப்படுவார்கள். இத்தகைய பாரம்பரியமிக்க ரஞ்சி கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.
2024/25 வருடத்திற்கான ரஞ்சி சீசன் கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மும்பை, விதர்பா, குஜராத் மற்றும் கேரள அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதனைத் தொடர்ந்து 2 அரை இறுதிப் போட்டிகளும் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைய இருக்கிறது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் வரலாற்றில் கேரள அணி இரண்டாவது முறையாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. கேரளா மற்றும் குஜராத் அணிகள் மோதிய முதல் அரையிறுதி போட்டி அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேரளா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்கத்தில் சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணியினர் 206 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்தினர். எனினும் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி கேரள அணி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற காரணமாக இருந்த சல்மான் நிசார் மற்றும் விக்கெட் கீப்பர் முஹம்மது அசாருதீன் ஜூனியர் ஆகியோர் சிறப்பாக விளையாடி கேரளாவை ஆரம்ப சரிவிலிருந்து மீட்டனர்.
இருவரும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 52 ரன்கள் குவித்த சல்மான் நிசார் அவுட்டானார். எனினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய அசாருதீன் மிகச் சிறப்பாக விளையாடி தனது சதத்தை நிறைவு செய்தார். மேலும் இவர் பின்வரிசை ஆட்டக்காரர்களுடன் விளையாடி கேரளா அணியின் ஸ்கோர் உயர காரணமாக அமைந்தார். இதனைத் தொடர்ந்து கேரளா 457 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அசாருதீன் 20 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 177 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய குஜராத் அணிக்கு துவக்க வீரர்கள் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அவர்கள் முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப்பாக 131 ரன்கள் குவித்தனர். இதனால் குஜராத் அணி முதல் இன்னிங்சில் லீட் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கேரள அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி குஜராத் அணியை 455 ரன்களுக்கு அவுட் செய்தனர். இதன் காரணமாக கேரள அணிக்கு முதல் இன்னிங்ஸில் 2 ரன்கள் லீட் கிடைத்தது.
கேரள அணியின் பந்துவீச்சில் ஜலஜ் சக்சேனா மற்றும் சர்வடே ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் கேரள அணி தற்போது வரை 106 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்திருக்கிறது. மேலும் இன்றைய நாள் முடிவதற்கு 24 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் இந்தப் போட்டி டிராவில் முடிவடையும். மேலும் முதல் இன்னிங்ஸில் கிடைத்த 2 ரன்கள் லீட் காரணமாக ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல்முறையாக கேரள அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இருக்கிறது.
கால் இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 1 ரன் முன்னிலை பெற்றதை தொடர்ந்து கேரளா அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தற்போது அரை இறுதிப் போட்டியிலும் குஜராத் அணிக்கு எதிராக 2 ரன்கள் முன்னிலை பெற்றிருப்பதன் மூலம் 91 வருட ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைக்க இருக்கிறது கேரள கிரிக்கெட் அணி.

