13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 45 லீக் போட்டிகள் இரண்டு அரை இறுதி போட்டி மற்றும் ஒரு இறுதிப் போட்டி என 48 ஆட்டங்களை கொண்ட இந்த சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 45 லீக் போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன.
இந்த லீக் போட்டிகளின் முடிவில் 18 புள்ளிகளுடன் அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இவர்களைத் தொடர்ந்து 14 புள்ளிகள் உடன் சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கின்றன. 10 புள்ளிகளை பெற்றிருக்கும் நியூசிலாந்து அணி நான்காவது அணியாக நாக் அவுட் சுற்று போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது .
இந்த உலகக் கோப்பையின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடிவந்த இந்தியா 9 போட்டிகளிலும் எதிரணிகளுக்கு வாய்ப்பை தராமல் வெற்றி பெற்று முதல் அணியாக உலகக்கோப்பை எண் அரை இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. கடந்த இரண்டு உலகக் கோப்பைகளிலும் அரை இறுதி ஆட்டங்களில் இந்தியா தோல்வியடைந்து இருப்பதால் இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது
இந்திய அணி தான் உலகக்கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பல கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் கணித்துவரும் நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்களில் ஒருவருமான மைக்கேல் ஹசி இந்திய அணியின் செயல்பாடுகள் பற்றியும் இந்திய இளம் தலைமுறை கிரிக்கெட் வீரர்களின் திறமை குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார் .
ஆஸ்திரேலியாவின் பாக்ஸ் கிரிக்கெட் சேனலில் பேசியிருக்கும் அவர் ” இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சகல துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படைகளையும் சிறப்பாக கட்டமைத்து இருக்கிறார்கள். மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள். இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் அது இந்தியாவை வீழ்த்தினால் மட்டுமே முடியும்” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” எனக்கு இருக்கும் ஒரே கேள்வி அவர்கள் நியூசிலாந்தை அரையிறுதி போட்டியில் வெல்வார்களா.? என்பது தான். இந்த உலகக்கோப்பை தொடர் அவர்கள் நாட்டில் நடைபெற்று வருவதால் சொந்த நாட்டு ரசிகர்களின் அழுத்தத்தை கையாண்டு அவர்களால் அரையிறுதி போட்டியில் வெல்ல முடியுமா என்பதை நான் பார்க்க வேண்டும். மேலும் நாக் அவுட் ஸ்டேஜில் இந்திய அணி எப்படி விளையாடுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். ஏனென்றால் ஒரு போட்டியில் தோற்றால் எல்லாம் முடிந்துவிடும் என்ற நிலையில் அவர்களது ஆட்டம் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணியின் இளம் தலைமுறை வீரர்கள் பற்றி பேசிய மைக்கேல் ஹசி” இளம் தலைமுறை வீரர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அவர்கள் கடந்த காலங்களில் எது நடந்தது என்றும் பார்ப்பதில்லை. தங்களது விதியை அவர்களே எழுதுகிறார்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் ரணங்கள் அவர்களது வெற்றிக்கான பயணத்தை தடுக்காது. மேலும் அந்தரணங்கள் மற்றும் காயங்களைப் பற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. தங்களுக்கு எது தேவையோ அதை நோக்கி தீர்க்கமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

