2025 ஆம் வருடத்தின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் வைத்து நடைபெற்று வருகிறது. மேலும் 29 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி போட்டியில் அந்த அணியே முதலாவதாக வெளியேறி இருப்பது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் அணியை நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில் விராட் கோலியின் அபார சதத்தால் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறின. சொந்த நாட்டில் நடைபெறும் ஐசிசி யின் மிகப்பெரிய போட்டி தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறி இருப்பது அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் தொடர்ந்து தங்களது அணியை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்தால் கூட இந்த பாகிஸ்தான் அணியை வைத்து ஜெயிக்க முடியாது என பாகிஸ்தான் மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக பிடிவி ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய அவர் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது தனது நண்பர் ஒருவர் பாகிஸ்தான் இந்த போட்டியில் தோற்றுவிடும் என தனக்கு மெசேஜ் அனுப்பியதாக குறிப்பிட்டார். மேலும் பாகிஸ்தான் அணி இப்போது தோற்கவில்லை அவர்கள் 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்த போதே தோற்று விட்டார்கள் என தனது நண்பருக்கு பதில் மெசேஜ் அனுப்பியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்தியாவிற்காக 3 ஐசிசி கோப்பைகளை வென்று தந்த எம்எஸ் தோனி கேப்டனாக இருந்தால் கூட இந்த அணியை வைத்து வெற்றி பெற்றிருக்க முடியாது எனவும் தெரிவித்திருக்கிறார். போட்டி நடைபெறும் ஆடுகளங்களுக்கு தகுந்தவாறு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் பாகிஸ்தான் அணி அவ்வாறு தேர்வு செய்யவில்லை என குறிப்பிட்டிருக்கிறார். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பாகிஸ்தான் மற்றும் துபாய் ஆடுகளங்களில் அனுபவம் இல்லாத சுழற் பந்துவீச்சாளரோடு களமிறங்கியது பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய தவறு எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

