தற்போது நடைபெற்று வரும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் அரை இறுதி போட்டிகளுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் இன்றோடு 40 லீக் போட்டிகள் நடைபெற்று இருக்கின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்திய அணியை தொடர்ந்து 14 புள்ளிகள் பெற்று இருக்கும் சவுத் ஆப்பிரிக்கா இரண்டாம் இடத்திலும் 12 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நான்காவது ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் இருக்கின்றன.
அரை இறுதி போட்டிகளுக்கான மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் நான்காவது இடத்திற்கு நியூசிலாந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது . இந்நிலையில் இந்திய அணியின் அபார ஆட்டம் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். எனினும் ஒரு சில முன்னாள் வீரர்கள் இந்திய அணி குறித்தும் பிசிசிஐ மற்றும் ஐசிசி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் இது தொடர்பாக கடும் சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர். குறிப்பாக ஹசன் ராசா ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து இந்திய அணிக்கு சாதகமான பந்துகளை வழங்குவதாக தெரிவித்திருந்தார். மேலும் டிஆர்எஸ் தொழில்நுட்பமும் இந்தியாவிற்கு சாதகமான வகையில் பயன்படுத்தப்படுவதாக அவரும் ஒரு சில பாகிஸ்தான் வீரர்களும் கருத்து பதிவு செய்திருந்தனர்.
இதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்வது யார் என்று தனக்குத் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” டிஆர்எஸ் தொழில்நுட்பம் என்பது 100% சரியானது என்று கூற முடியாது. மோசமான முடிவுகளும் எடுக்கப்பட்டு இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் ஐசிசி மற்றும் அனைத்து கிரிக்கெட் வாரியங்களின் சம்மதத்துடனே இந்த தொழில்நுட்பம் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற சர்ச்சைகளை நமது நாட்டைச் சார்ந்த சகோதரர்கள் தான் வீணாக பரப்பி வருகிறார்கள்” என தெரிவித்தார்.
இது சம்பந்தமாக பேசிய பாகிஸ்தான் அணியின் மற்றொரு முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்” இந்தத் தொழில்நுட்பம் மனித தவறுகளை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தல நடுவர்கள் எடுக்கும் சில தவறான முடிவுகள் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆட்டங்களில் ஏற்படும் தவறுகளின் சதவீதமும் பெருமளவில் குறைந்து இருக்கிறது” என்று தனது கருத்தை பதிவு செய்தார்.
ஆனால் பாகிஸ்தான் அணியின் சோயப் மாலிக் இவர்கள் இருவரது கருத்திலிருந்து மாறுபட்டு ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார். மனித தவறுகளின் மீது அனைத்து குற்றச்சாட்டுகளையும் சுமத்துவது என்றால் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ரவீந்திர ஜடேஜா மற்றும் நூர் அகமது ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட முடிவுகள் தான். இந்த தொழில்நுட்பங்கள் முழுமையாக சரியானவை இல்லை என தெரிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு பாகிஸ்தான் வீரர் மொயின் கான் அம்பையர்ஸ் கால் என்ற முடிவு டிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

