ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிரிஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பர்களின் பரிணாமத்தை முற்றிலுமாக மாற்றிய வீரர். ஆஸ்திரேலியா அணிக்காக ஏழாவது இடத்தில் களம் இறங்கி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பல டெஸ்ட் போட்டிகளின் முடிவை ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக மாற்றியவர். எனினும் 2008 ஆம் வருடம் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 96 ஆவது டெஸ்ட் போட்டியில் ஓய்வை அறிவித்ததற்கான காரணத்தை 16 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்து கூறி இருக்கிறார் கில்கிரிஸ்ட்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 100-வது டெஸ்ட் போட்டியை விளையாடுவதற்கு 4 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் கில்கிரிஸ்ட் தனது ஓய்வை அறிவிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 2008 ஆம் வருடம் இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது இறுதியாக நடைபெற்ற அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுவதாக கில்க்ரிஸ்ட் அறிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் திடீரென ஓய்வை அறிவிப்பதற்கு இந்திய அணியின் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தான் காரணம் என தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக விரிவாக பேசிய கில்கிரிஸ்ட் இந்திய அணி 2007-08 வருடம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த போது விசித்திரமான சில சம்பவங்கள் நடந்தது. அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்கு முந்தைய இரவு, நான் என் மனைவியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன். இந்திய தொடரை முடித்துவிட்டு நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் செல்ல இருந்தோம். அப்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு மனைவியை அழைத்துச் செல்வது குறித்து அவருடன் விவாதித்துக் கொண்டிருந்தேன் என தெரிவித்தார்.
மேலும் மறுநாள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ப்ரெட் லீ வீசிய பந்தில் விவிஎஸ் லக்ஷ்மன் கேட்ச் கொடுத்தார். மிகவும் எளிமையான கேட்ச். ஆனால் நான் தவற விட்டேன். அந்தக் காணொளி மைதானத்தில் இருந்த பெரிய டிவியில் பலமுறை ஒளிபரப்பப்பட்டது. அதனைக் கூர்ந்து கவனித்தேன். அந்த நிமிடமே நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து விட்டேன். இது தொடர்பாக முதல் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த மேத்யூ ஹெய்டனிடம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என தெரிவித்தேன் என்று கூறினார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருந்தோம். அந்தப் போட்டிகளில் விளையாடி இருந்தால் 99 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருப்பேன். அதனைத் தொடர்ந்து இந்தியா சுற்றுப்பயணம் செல்ல இருந்தோம். அப்போது இந்தியாவில் எனது 100-வது டெஸ்ட் போட்டியை நிறைவு செய்து ஆஸ்திரேலியா அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் எனது பெயரும் இணைந்திருக்கும். ஆனால் அந்த கேட்ச்சை தவறவிட்ட நிமிடமே ஓய்வு பெறுவது என்று முடிவு செய்து விட்டேன் என கில்கிரிஸ்ட் தெரிவித்தார்.
நான் இது குறித்து ஹெய்டனிடம் கூறிய போது அவர் எனது முடிவை மாற்றுமாறு கேட்டுக் கொண்டார். கேட்ச் தவற விடுவது என்பது கிரிக்கெட்டில் புதிதல்ல. இது நீ தவறவிடும் முதலாவது கேட்ச் இல்லை. மேலும் இது தவறவிடும் கடைசி கேட்சாக இருக்கப் போவதுமில்லை. அதனால் ஓய்வு பற்றி இப்போது யோசிக்க வேண்டாம் என அவர் கூறினார். நல்ல சக வீரராக அவர் எனக்கு இந்த அறிவுரையை வழங்கினார். ஆனாலும் அந்த கேட்ச் தவற விடப்பட்ட நிமிடமே என்னுடைய ஓய்வை பற்றி நான் முடிவு செய்து விட்டேன். அந்த முடிவிற்காக எந்த வருத்தமும் இல்லை என கில்கிரிஸ்ட் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இதனை தொடர்ந்து நடைபெற்ற சீபி முத்தரப்பு ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்தத் தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கில்க்ரிஸ்ட் அறிவித்தார். ஆஸ்திரேலிய அணிக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கில்கிரிஸ்ட் 5570 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 17 சதங்களும் அடங்கும். 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் எடுத்த ஒரே விக்கெட் கீப்பர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

