தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் அரை இறுதிப் போட்டியில் விளையாடும் 4 அணிகள் ஏறக்குறைய முடிவாகிவிட்டது என்று தெரிகிறது. இந்தியா சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ள நிலையில் நான்காவது அணியாக நியூசிலாந்து தகுதி பெறுவதற்காக அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதன் அடிப்படையில் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல் அரை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மும்பையில் வைத்து விளையாடும். இரண்டாவது அரை இறுதி போட்டி நவம்பர் 16ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் வைத்து நடைபெறுகிறது. நியூசிலாந்து அணி உலக கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் விளையாடுவது 99% முடிவாகிவிட்ட நிலையில் சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து போட்டிகளுக்கு பின்னர் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் துவக்கத்தில் இருந்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா அணியுடன் துவக்க போட்டியில் சிறிது தடுமாற்றத்தை சந்தித்தாலும் அதன் பிறகு நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது தற்போது உரை நடைபெற்றுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கிறது. இது தொடர்பாக கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்த உலகக் கோப்பையில் இந்தியா வீழ்த்த முடியாத அணியாக விளங்கி வருவதாக தங்களது கருத்துக்களை பதிவு செய்து இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் மூன்று முறை உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்ற வருமான ஆடம் கில்கிரிஸ்ட் இந்தியாவை இந்த உலகக் கோப்பையில் எவ்வாறு வீழ்த்தலாம் என தனது வியூகத்தை வெளியிட்டு இருக்கிறார். ஆஸ்திரேலியா போன்ற அணிகள் நாக் அவுட் சுற்று போட்டிகளில் இந்த ஒரு விஷயத்தை செய்தால் மட்டுமே இந்தியாவை வீழ்த்த முடியும் எனவும் அவர் தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் கில்கிரிஸ்ட் ” என்னை பொருத்தவரை இந்தியாவை வெல்ல வேண்டுமானால் டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். இந்தியா இப்படித்தான் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நான் இப்படிச் சொல்வதால் இந்தியா சேஸ்சிங்கில் பலவீனமாக இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். அவர்களிடம் சேஸ் மாஸ்டர் விராட் கோலி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசி இருக்கும் அவர் ” ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் மின்னொளியில் பந்து வீசும் போது எதிரணி வீரர்களுக்கு எவ்வாறான சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். சிராஜ் சமி மற்றும் பும்ரா ஆகியோர் இரண்டாவதாக பந்து வீசும் போது மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளர்களாக இருக்கிறார்கள். எதிரணி பேட்ஸ்மேன்களால் அவர்களை எதிர்கொள்ளவே முடியவில்லை . அதனால் முதலில் பேட்டிங் செய்யும்போது அவர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
“இந்தியா துவக்க காலங்களில் திறமையான சுழற் பந்துவீச்சாளர்களை அதிகம் கொண்ட அணியாக இருந்து வந்தது. அதற்கு அவர்களது ஆடுகளங்களின் தன்மையும் ஒரு காரணமாக இருந்தது ஆனால் வெளிநாட்டு மைதானங்களில் ஆதிக்கம் செலுத்த அவர்கள் தங்களது வேகப்பந்து வீச்சு கூட்டணியை வலிமைப்படுத்த நினைத்தார்கள். இதற்காக எம்ஆர்எஃப் வேகப்பந்துவீச்சு அகாடமி தோற்றுவிக்கப்பட்டது. முன்னர் டெனிஸ் லில்லி தற்போது மெக்ராத் ஆகியோர் பயிற்சியாளர்களாக இருந்து உதவி வருகின்றனர்” எனவும் தெரிவித்திருக்கிறார்.

