சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் புதிய சவால்களை எதிர்கொள்கிறது. ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் சரியான போக்கில் விலையாடததால் அணிக்கு பெரிய சரிவாக உள்ளது. குறிப்பாக சென்னை அணியின் பேட்டிங்கில் சுத்தமாக தெம்பு இல்லை. 6 போட்டிகளில் 1 வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் பாதாளத்தில் கிடக்கிறது.
இரு தினங்கள் முன்னர், மிகப் பெரிய அடியாக சென்னை அணியின் கேப்டன் மற்றும் அணியில் இருக்கும் ஒரே நம்பிக்கையாக பேட்ஸ்மேனான ருத்துராஜ் கெய்க்வாட் முழங்கை எலும்பு முறிவு காரணமாக விலகியதால், மீண்டும் எம்.எஸ். தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். பரிதவிக்கும் சென்னை அணியின் பேட்டிங்க்கு இது மேலும் ஓர் மரண அடி. நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அதை நேரலையிலும் கண்டோம்.
ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை அணியின் 3வது குறைவான ஸ்கோராக 103/9 என பதிவானது. மேலும் டிபென்டிங்கிலும் மோசமான தோல்வியாக, 56 பந்துகள் மீதம் இருக்கும் பட்சத்தில் சென்னை அணியை கொல்கத்தா வீழ்த்தியது. ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக நிறைய தவறுகள் செய்ததால் அடுத்தடுத்து தோல்வி என பல்வேறு விமர்சனங்கள் வந்தன. மீண்டும் தோனி கேப்டனாக வந்த பின்னர், ரசிகர்கள் அனைவரும் சந்தோசத்தில் சென்னை அணியின் வெற்றியை எதிர்பார்த்துக் காதுக்கிடந்தனர். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது என்னவோ மிகவும் மோசமான தோல்வி. சேப்பாக்கில் இந்த சீசனில் இது மூன்றாவது தொடர் தோல்வி.
போட்டிக்கு முன்னரே, முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா, தோனியின் மறுவருகை அணியின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்காது என எச்சரித்து இருந்தார். அவர் கூறியதாவது, “ தோனியைக் கேப்டனாக கொண்டு வருவதால் பிரச்சனைகள் தீர்ந்து விடப் போவதில்லை. ருத்துராஜ் போன்ற நிலையான பேட்ஸ்மேனை மாற்றுவது எளிதல்ல. அணியில் இன்னும் பல பலவீனங்கள் உள்ளன. இதனிடையே, டெவன் கான்வேயின் சமீபத்திய ஆட்டம் சிறிது நம்பிக்கை அளித்தாலும், ரச்சின் ரவீந்திராவின் நிலையற்ற தன்மை கவலையளிக்கிறது. ” என்றார்.
ஏறத்தாழ இந்த சீசன் சென்னை அணிக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது. மற்ற அணியில் எவ்வாறு இளம் வீரர்கள் முன்வந்து சிறப்பான ஆடத்தைப் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கிறதோ, அதே போல சென்னை அணியில் இருக்கும் இளம் நட்சத்திரங்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு அளித்து பார்ப்பது நல்லது என ரசிகர்களே வலியுறுத்துகிறார்கள்.

