கிரிக்கெட் உலகின் மகத்தான போட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது 50 ஓவர் உலகக் கோப்பை. இந்தப் போட்டிகளின் 13 வது எடிசன் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 48 போட்டிகளை கொண்ட இந்த உலகக் கோப்பை தொடரில் 45 போட்டிகள் முடிவடைந்து விட்டன.
அரை இறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என மூன்று முக்கிய போட்டிகள் மட்டுமே மீதம் இருக்கிறது. இந்தியா சவுத் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வருகின்ற புதன்கிழமை நடைபெற இருக்கும் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர் கொள்ள இருக்கிறது. இந்தப் போட்டி மும்பையில் வைத்து நடைபெற உள்ளது. வியாழக்கிழமை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகள் மோத இருக்கின்றன.
இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் அகமதாபாத்தில் உலக சாம்பியன் பட்டத்திற்காக மோதும். இந்த வருட உலக கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. விளையாடிய அணைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்திய அணியுடன் விளையாட இருக்கும் நியூசிலாந்து விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றிகள் உடன் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடம் பிடித்திருக்கிறது.
அந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவுடன் ஒப்பிடும்போது நியூசிலாந்து சற்று பலம் குறைந்த அணியாகவே மதிப்பிடப்படுகிறது. எனினும் கடந்த சில ஐசிசி தொடர்களில் இந்திய அணியை நியூசிலாந்து நாக் அவுட் செய்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியிலும் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதற்கெல்லாம் பழி தீர்ப்பதற்காக இந்த அரை இறுதிப் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டேவான் கான்வே கிரிக்கெட் நியூசிலாந்தின் இணையதளத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். அரை இறுதிப் போட்டி தொடர்பாக பேசியிருக்கும் அவர் இந்திய அணி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தாலும் எங்களிடம் இருக்கும் ஒரு விஷயம் மிகவும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் கான்வே “இந்திய அணி எவ்வளவு வலிமையானது என்று நம் அனைவருக்கும் தெரியும். அவர்கள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர். மேலும் இந்தியா வலிமையான ஒரு அணியை பெற்றிருக்கிறது. எனினும் இந்த சவாலுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். உலகக் கோப்பையை நடத்தும் நாடுடன் அரை இறுதியில் விளையாடுவது என்பது எப்போதுமே மகிழ்ச்சியான ஒன்று. இந்திய கிரிக்கெட் அணி மிகப்பெரிய அச்சுறுத்தல். எனினும் அந்த சவாலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இது நாம் அனைவருக்குமே சிறப்பான ஒரு தருணம். நமது அணியில் உலகக்கோப்பை அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள அனுபவம் மிகப்பெரிய உதவியாக இருக்கும் . இந்திய அணியின் பார்மை காட்டி அனைவரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நம்மிடம் உலகக்கோப்பை அரை இறுதி போட்டிகளில் விளையாடிய வீரர்களின் அனுபவம் இருக்கிறது. அதை நமக்கு கை கொடுக்கும்” என தெரிவித்து இருக்கிறார் . “உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடுவது நமது இலக்கு என்றாலும் அதற்கு ஒரு படி அருகே சென்று இருப்பது மகிழ்ச்சி ஒவ்வொருவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறோம்” எனவும் தெரிவித்தார்.
“இதுவரை சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறோம். இனிவரும் போட்டிகளிலும் அதுபோன்றே தொடர்ந்து செயல்பட விரும்புகிறோம். நாம் நன்றாக விளையாடினால் நமது விளையாட்டு வெற்றி தோல்விகளை பார்த்துக் கொள்ளும் . என்னுடைய முதல் உலகக் கோப்பை தொடரிலே அரை இறுதி வரை முன்னேறி இருப்பதே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறி முடித்தார் டேவான் கான்வே.

