ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் 33 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் 160 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி டெல்லி அணியின் கருண் நாயர் – அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தது. லக்னோ அணி தரப்பில் ஷர்துல் தாகூர் வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரி உட்பட 15 ரன்கள் விளாசப்பட்டது. இதன்பின் டெல்லியை அணியை பின்பற்றி லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டும் உடனடியாக ஸ்பின்னர்களை கொண்டு வந்தார்.
அபிஷேக் போரல் அரைசதம்
ஆனால் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்க்கப்பட்ட போது, கருண் நாயர் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் கேஎல் ராகுல் – அபிஷேக் போரல் இணை சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. இதனால் 6 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 54 ரன்களை சேர்த்தது.
இதன்பின் இருவருமே நிதானமாக ஆடிய நிலையில், அபிஷேக் போரல் திடீரென அட்டாக்கை தொடங்கினார். இதனால் 10 ஓவர்களில் டெல்லி அணி 80 ரன்களை எட்டியது. அப்போது 11வது ஓவரை வீச ரவி பிஷ்னாய் வந்த போது, அபிஷேக் போரல் சிக்ஸ் அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து கேஎல் ராகுலும் சிக்ஸ் அடிக்க, அந்த ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட்டது.
டெல்லி அபாரம்
சிறப்பாக ஆடிய அபிஷேக் போரல் 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அக்சர் படேல் களம் புகுந்தார். இதன்பின் அக்சர் படேல் அடுத்தடுத்து சிக்ஸ் அடித்து வெளுத்து கட்டினார். இன்னொரு பக்கம் கேஎல் ராகுல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவாகியது. இதன்பின் கேஎல் ராகுலும் அட்டாக்கில் இணைந்தார்.
தொடர்ந்து அசத்தலாக ஆடிய கேஎல் ராகுல் 40 பந்துகளில் அரைசதம் கடக்க, அந்த ஓவரிலேயே சிக்ஸ் அடித்து ஆட்டத்தையும் முடித்தார். இதனால் டெல்லி அணி 17.5 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் டெல்லி அணி 12 புள்ளிகள் பெற்று 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

