ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34 பந்துகளில் 53 ரன்களையும், ஸ்டாய்னிஸ் 16 பந்துகளில் 44 ரன்களையும் விளாசி தள்ளினர்.
அசத்தல் தொடக்கம்
இதன்பின் டெல்லி அணி தரப்பில் கேஎல் ராகுல் – டூ பிளஸி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் 2 ஓவர்களில் நிதானம் காட்டிய நிலையில், 3வது ஓவர் முதல் இருவரும் அதிரடியை தொடங்கினார்கள். கேஎல் ராகுல் 2 பவுண்டரிகளை விளாச, டூ பிளஸி சிக்சரை விளாசினார். இதனால் 5 ஓவர்களிலேயே டெல்லி அணியின் ஸ்கோர் 50 ரன்களாக உயர்ந்தது.
பின் சிறப்பாக ஆடி கொண்டிருந்த கேஎல் ராகுல் 35 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் கருண் நாயர் வந்தார். அடுத்த ஓவரிலேயே டூ பிளஸி 23 ரன்களில் ஆட்டமிழக்க, கருண் நாயர் – அடல் கூட்டணி இணைந்தது. இருவரும் அதிரடியாக ரன்களை விளாசியதால், 10 ஓவர்களிலேயே டெல்லி அணி 93 ரன்களை எட்டியது. பின் அதிரடியாக ஆடிய அடல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
22 பந்துகளில் அரைசதம்
ஆனால் அதே ஓவரிலேயே கருண் நாயர் 4 பவுண்டரிகளை தொடர்ச்சியாக விளாசி தள்ள, இன்னொரு பக்கம் சமீர் ரிஸ்வி அதிரடியில் பொளந்து கட்டினார். ஒவ்வொரு ஓவரிலும் சமீர் ரிஸ்வி சிக்சரை விளாசி தள்ள, 15 ஓவர்களில் டெல்லி அணியின் ஸ்கோர் 155 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கருண் நாயர் அரைசதம் அடிப்பார் என்று பார்த்த போது, 44 ரன்களில் வெளியேறினார்.
இதன்பின் முழுக்க முழுக்க சமீர் ரிஸ்வியின் ருத்ரதாண்டவம் வெளி வந்தது. ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சராக விளாசி தள்ளியதால், 22 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். சமீர் ரிஸ்வியின் முதல் அரைசதம் இதுவாகும். இறுதியாக கடைசி ஓவரில் 8 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட போது, சமீர் ரிஸ்வி சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதனால் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

