17-வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது போடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் காயத்தில் இருந்து மீண்டு வந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷபந்த் ஒரு வருடம் கழித்து முதல் போட்டியில் களமிறங்கினார்.
சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் மிட்சல் மார்ஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த இந்த ஜோடி 3.2வது ஓவரில் 31 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டைப் பறி கொடுத்தது.
மிச்சல் மார்ஸ் 12 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் குவித்து 20 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வார்னருடன் கைகோர்த்த சாய் ஹோப் இருவரும் டெல்லி அணி ஸ்கோரில் முன்னிலை பெற உதவினர். வார்னர் 21 பந்துகளில் மூன்று பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என 29 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய சாய் ஹோப் 33 ரன்களில் தனது விக்கெட்டினைப் பறி கொடுத்தார்.
14 மாத இடைவெளிக்குப் பிறகு டெல்லி அணியின் கேப்டன் ஆன ரிஷப் பந்த் களமிறங்கினார். அப்போது அவரைக் கண்ட ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பில் மைதானமே அதிர்ந்தது. அவர் மீது பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், 13 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மட்டுமே குவித்து 18 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்கு அடுத்ததாக வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்பரன்களில் ஆட்டம் இழக்க, 18.3 ஓவர்களில் டெல்லி அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
அதன் பின்னர் பஞ்சாப் அணியின் கடைசி ஓவர் வீச ஹர்சல் பட்டேல் காத்திருக்க, டெல்லி அணிக்கு இம்பாக்ட் பிளேயராக களம் இறங்கிய அபிஷேக் பொரேல் இருபதாவது வரை எதிர் கொண்டார். இந்த கடைசி ஓவர் ஆட்டத்தின் மிக முக்கிய திறப்பு முனையாக அமைந்தது. ஹர்ஷல் பட்டேல் வீசிய முதல் பந்தினை லெஃப்ட் சைடில் பவுண்டரி அடித்த அவர், இரண்டாவது பந்தை லாங் ஆன் திசையில் தலைக்கு மேலே ஒரு சிக்சரை விளாசினார்.
அதன் பிறகு ஸ்லோவாக வீசப்பட்ட மூன்றாவது பந்தை லெஃப்ட் சைடில் மீண்டும் ஒரு பவுண்டரி அடிக்க, பவுன்சராக போடப்பட்ட நான்காவது பந்தை சிறப்பான முறையில் அப்பர்-கட் செய்து ஒரு பவுண்டரி விளாசினார். அதன் பிறகு அதே லெந்தில் வீசப்பட்ட ஐந்தாவது பந்தை லெஃப்ட் சைடில் ஒரு சிக்சராக விளாசினார். கடைசி பந்தில் ஒரு ரன் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது.
கடைசி ஓவரில் மட்டும் 25 ரன்கள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிரடியாக விளையாடிய அபிஷேக் பொரேல் 10 பந்துகளில் நான்கு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என 32 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

