இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளின் சீசன் தொடங்குவதற்கு முன்பாக மாநில கிரிக்கெட் அசோசியேஷன்கள் நடத்தும் டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து மகாராஜா பிரிமியர் லீக் தொடர், டெல்லி பிரிமியர் லீக் தொடர்களும் நடைபெற்று வருகின்றன. இதே போல் உத்தரப்பிரதேச மாநில கிரிக்கெட் சங்கம் சார்பாக நடத்தப்படும் யுபிஎல் டி20 போட்டிகளின் இரண்டாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சமீர் ரிஸ்வி 51 பந்துகளில் 89 ரன்கள் குவித்தது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திர பிரதேசம் மாநில கிரிக்கெட் சங்கம் சார்பாக கடந்த வருடம் யுபிஎல் டி20 தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆறு அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சமீர் ரிஸ்வி தலைமையிலான கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணியும் பிரியம் கர்க் தலைமையிலான லக்னோ ஃபால்கன்ஸ் அணியும் மோதியது . இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கான்பூர் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.
அந்த அணி 16 ரன் களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்திருந்த போது அணியின் கேப்டனும் சிஎஸ்கே அணியின் வீரருமான சமீர் ரிஸ்வி பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார். லக்னோ அணியில் புவனேஸ்வர் குமார் போன்ற அனுபவ பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருந்ததால் அவர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கான்பூர் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கான்பூர் அணி 50 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. எனினும் அந்த அணியின் கேப்டன் சமீர் ரிஸ்வி தனி ஆளாக போராடி தனது அணியை சரிவிலிருந்து மீட்டார்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சமீர் ரிஸ்வி தனது அரை சதத்தை பதிவு செய்தார். அதிரடியாக ஆடிய அவர் 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரது அதிரடியால் 84 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறிய கான்பூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மொத்த ரன்களில் 57 சதவிகித ரன்கள் சமீர் ரிஸ்வியால் குவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோ அணியின் பந்து வீச்சில் முன்னாள் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 33 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 72 ரன்களுக்கு 2 விக்கெட் மட்டும் இழந்து வலுவான நிலையில் இருந்தது. எனினும் கான்பூர் அணியின் சிறப்பான பந்துவீச்சால் லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக கான்பூர் அணி பரபரப்பான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒரு கட்டத்தில் லக்னோ அணி 123 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து தடுமாறிய போது அனுபவ வீரர் புவனேஸ்வர் குமார் சிறப்பாக போராடி லக்னோ அணியை வெற்றியின் விளிம்பில் அழைத்துச் சென்றார். எனினும் கான்பூர் அணியின் சிறப்பான பந்துவீச்சால் லக்னோ அணி 153 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. கான்பூர் அணியின் பந்துவீச்சில் சுபம் மிஸ்ரா 4 ஓவர்கள் பந்து வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி 89 ரன்கள் குவித்த சமீர் ரிஸ்வி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி சமீர் ரிஸ்வியை 8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அதிரடியாக விளையாடினாலும் கடந்த ஐபிஎல் சீசனில் சமீர் ரிஸ்வி குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற கருத்து நிலவியது. எனினும் தற்போதைய அதிரடியின் மூலம் சிஎஸ்கே அணியின் தேர்வு சரியானது என சமீர் ரிஸ்வி மீண்டும் நிரூபித்திருக்கிறார். தோனி எடுத்த முடிவு எப்போதும் தப்பாது என சிஎஸ்கே ரசிகர்களும் சமீர் ரிஸ்வியின் அதிரடி ஆட்டத்தை கொண்டாடி வருகின்றனர்.

