பரபரப்பாக நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூர் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வெற்றி பெற்று பெங்களூர் அணி சாதனையும் படைத்திருக்கிறது. போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் முக்கிய காரணங்களை தெரிவித்து இருக்கிறார்.
பெங்களூர் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் டூ ப்ளஸ்சிஸ் அதிகபட்சமாக 54 ரன்கள் குவித்தார். பின்னர் விராட் கோலி 47 ரன்களும், பட்டிதார் 41 ரன்களும் குவித்தனர்.
அடுத்து வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் அந்த அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவிந்த்ரா சிறப்பாக விளையாடி 61 ரன்கள் விளாசினார். இருப்பினும் அவர் ஆட்டம் இழந்த பிறகு தோனியும், ஜடேஜாவும் போராடினாலும் சென்னை அணியால் 20 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதனால் 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் இந்தத் தொடர் குறித்து கூறும் பொழுது
” இது ஒரு நல்ல ஆடுகளமாக அமைந்தது. பந்துவீச்சாளர்களுக்கு பெரிதும் உதவியது நாங்கள் நிர்ணயித்த டார்கெட் எங்களுக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் எங்களால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. இந்த சீசனில் ஏழு வெற்றுகளை பெற்றதே மகிழ்ச்சி அளிக்கிறது.
காயம்தான் முதலில் எங்கள் அணிக்கு பெரிய பிரச்சனை. தொடருக்கு முன்பே கான்வே காயம் காரணமாக வெளியேறினார். முஸ்தபிகுர் மற்றும் பத்திரானா ஆகியோர் தொடரின் பாதியில் வெளியேறியது, என எங்களுக்கு காயம் சார்ந்த பிரச்சினை நீண்டு கொண்டே வந்தது. ஒரு அணியில் காயங்கள் அதிகமாக இருந்தால் சமநிலை அணியை உருவாக்கி வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினம்.
இதையும் படிங்க:ஆர்சிபியின் வெற்றிக்கு காரணமே தோனி தான்.. தோனியால்தான் எங்களுக்கு இந்த மாற்றம் நடந்தது.. சீக்ரெட்டை உடைக்கும் தினேஷ் கார்த்திக்
எங்களால் இந்த போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இறுதியாக நமக்கு நல்ல முடிவுகள் கிடைக்கவில்லை இதனால் தனிப்பட்ட முறையில் எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று ஆறாவது கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்திருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு இந்த போட்டி ஏமாற்றமாகவே முடிந்திருக்கிறது.

