2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இதன் லீக் சுற்றில் கத்துக்குட்டி அணிகள் கூட சிறப்பாக செயல்பட்டு அடுத்த சுற்றை எட்டி இருக்கின்றன.
ஆனால் பலமான முன்னணி அணிகளாக கருதப்பட்ட நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் கூட இந்த தொடரில் சொதப்பலாக செயல்பட்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி இருக்கின்றன.
இந்தத் தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. முதல் போட்டியில் அயர்லாந்து அணியையும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானையும், மூன்றாவது போட்டியில் அமெரிக்காவையும் வீழ்த்தி தற்போது பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக இந்திய அணியும் உள்ளது.
இதில் அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு நிகராக பலம் வாய்ந்த மற்றொரு அணியாக கருதப்படும் ஆஸ்திரேலிய அணியுடன் ஒரு போட்டியில் மோத இருக்கிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி இடம் பெறும் குழுவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இருக்கின்றன. ஆஸ்திரேலியா அணி தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாமல் இந்திய அணி போன்று பலம் வாய்ந்ததாக உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி மோதும் சூப்பர் 8 சுற்றில் அணிகள், இடம் மற்றும் தேதி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் முதல் போட்டியாக இந்திய அணி ஜூன் 20 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை வெஸ்ட் இண்டீஸ் பார்படாஸ் மைதானத்தில் மோத இருக்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும். அதற்கு அடுத்த போட்டியாக ஜூன் 22 ஆம் தேதி இந்திய அணி வங்காளதேச அணியுடன் ஆன்ட்டிகுவா மைதானத்தில் மோத இருக்கிறது.
அடுத்த கடைசி போட்டியாக ஜூன் 24ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியுடன் செயின்ட் லூசியா மைதானத்தில் விளையாட உள்ளது. இந்த இரண்டு போட்டிகளுமே இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியை தவிர இந்திய அணிக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கடும் சவால் அளிக்கக்கூடிய அணிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:கோலி, ரோஹித் இதை சிந்திக்கணும்.. இல்லன்னா தேர்வு குழு முடிவெடுத்துருவாங்க.. சஞ்சய் மஞ்சுரேக்கர் பேட்டி
இந்த சுற்றில் ஒரு அணி மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதன் அடிப்படையிலேயே அடுத்த அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும். மூன்றில் இரண்டு போட்டிகள் தோல்வி அடைந்தால் தொடரை விட்டே வெளியேறும் நிலையும் ஏற்படும். இதனால் இந்திய அணி அடுத்து வரும் மூன்று போட்டிகளை மிக கவனத்துடன் விளையாடி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

