இந்தியன் பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் தொடறர் நாளை தொடங்குகிறது. இதன் முதல் போட்டியாக சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் யாரும் எதிர்பாராத விதமாக சென்னை அணி தங்களது புதிய கேப்டனை அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடர் நாளை நடைபெறுவதை ஒட்டி பிரமாண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதன் தொடக்கப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுவதால், தற்போது இந்த இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தை வந்தடைந்த இரு அணி வீரர்களும் பயிற்சி பெறும் வீடியோக்கள், புகைப்படங்கள் என அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவது எப்போது? அவர் ஓய்வு பெற்றால் சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார்? என்பது போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி வந்தது. அதுபோலவே மகேந்திர சிங் தோனியும் த னது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய போது எந்த ஹேர் ஸ்டைல் உடன் வந்தாரோ தற்போதும் அதே மாதிரியாக இந்த ஐபிஎல் தொடரில் பங்கு பெற உள்ளார்.
எனவே இதுதான் அவரது கடைசி ஐபிஎல் தொடரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். சென்னை அணியின் அடுத்த கேப்டன் குறித்து 2022ஆம் ஆண்டிலேயே மகேந்திர சிங் தோனி ரவீந்திர ஜடேஜாவை பரிசோதனைக்கு உட்படுத்தினார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்து ரவீந்திர ஜடேஜா கேப்டனாக வழிநடத்திய எட்டு போட்டிகளில் சென்னை அணி ஆறு போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. எனவே மீதமுள்ள போட்டிகளுக்கும் தோனியை கேப்டனாக செயல்பட்டார்.
2023ஆம் ஆண்டு சீசனில் முழு நேர கேப்டனாக செயல்பட்ட தோனி, கடந்த சீசனில் ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்து ரசிகர்களின் ஆசையையும் நிறைவேற்றினார். தற்போது 42 வயதாகும் தோனி இந்த சீசனில் பங்கு பெறுவதற்கு முன்னரே ‘புதிய ரோலை ஏற்க போகிறேன்’ என்று சமூக வலைதளங்களில் அறிக்கையை வெளியிட்டார். அது என்ன ரோல் என்று விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், சென்னை அணி எதிர்பாராத விதமாக ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அணி கேப்டன்களும் கோப்பையின் முன் நின்று போஸ் கொடுப்பது வழக்கம். சென்னை அணியின் சார்பாக தோனி பங்கு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், எதிர்ப்பார விதமாக ருத்ராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் சார்பாக பங்கேற்று இருக்கிறார். இதனால் சென்னை அணியின் கேப்டனாக வரும் சீசனில் இருந்து ருத்ராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு அறிவிப்பு யாருமே எதிர்பார்க்காத ஒன்று. மகேந்திர சிங் தோனி சீசன் முழுவதும் கேப்டன்சி செய்துவிட்டு, அல்லது சீசனின் பாதியில் வேறு ஒருவருக்கு ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே தனது கேப்டன்சியை ருத்ராஜ் கெய்க்வாட்டிற்க்கு கொடுத்திருக்கிறார். எனவே இந்த சீசனில் சென்னை அணி ருத்ராஜ் தலைமையிலேயே களமிறங்க போகிறது. எனவே மகேந்திர சிங் தோனி ஏற்றிருக்கும் புதிய ரோல் என்ன என்பது நாளை தெரியும்.

