நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பிறகு பேசி இருந்த இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் விக்கட்டுகள் விழும் பொழுது இந்திய பேட்ஸ்மேன்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசி இருக்கிறார்.
மிகக் குறிப்பாக ஹர்திக் பாண்டியா அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் விக்கெட் விழுந்து இருந்த நேரத்தில் உள்ளே வந்து முதல் பந்திலேயே அதிரடியாக விளையாடச் சென்று ஆட்டம் இழந்து இருந்தார். நேற்று சூரியகுமார் ஆட்டமிழந்து வெளியே செல்லும் பொழுது உள்ளே வந்த ஹர்திக் பாண்டியாவிடம் ஏதோ கூறிவிட்டு சென்றார்.
தற்பொழுது இது குறித்து பேசி உள்ள சூரிய குமார் யாதவ் கூறும்பொழுது “நாங்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தோம். இப்படியான சூழ்நிலை இந்த தொடரில் எங்களுக்கு மீண்டும் வந்துதான் ஆகும். எனவே எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும். நேற்று நாங்கள் அதை புரிந்து கொண்டு விளையாடிய காரணத்தினால் 190 ரன்கள் தாண்டி எங்களால் எடுக்க முடிந்தது”
“இந்த போட்டியை எடுத்துக் கொண்டால் நாங்கள் பல வகைகளில் சிறப்பாக விளையாடியிருக்கிறோம். மேலும் தோல்வியடைந்த போட்டி இல்லாமல் வெற்றியடைந்த போட்டியில் கற்றுக் கொள்வது மிகவும் முக்கியம். நாங்கள் வெற்றியடைந்த இந்த போட்டியில் இருந்து சில முக்கிய பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

