இந்திய கிரிக்கெட்டின் பந்து வீச்சில் தற்போது முடிசூடா மன்னனாக திகழ்பவர் ஜஸ்ப்ரித் பும்ரா. 2013ஆம் ஆண்டு முதன் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களம் இறங்கிய போது சச்சினின் வார்த்தைகள் தனக்கு உத்வேகம் அளித்ததாகக் கூறி இருக்கிறார்
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் முதலில் களம் இறங்கிய ஒல்லியான உருவம் கொண்ட அந்த இளைஞன், வழக்கத்திற்கு மாறான பந்துவீச்சு ஆக்சனில் ஓடி வந்து முதல் பந்தினை வீசும் பொழுது யாருக்கும் தெரியாது இவர்தான் பந்துவீச்சில் நம்பர் ஒன் பௌலராக வரப்போகிறார் என்று. அப்படி ஆரம்பித்தது தான் இவர் கிரிக்கெட் கேரியர்.
அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் சக வீரரான மலிங்காவிடம் யார்க்கர் பந்துகள் வீசுவது குறித்து துல்லியமாக கற்றுக்கொண்டு, இன்று உலகின் எந்த ஒரு தலை சிறந்த பேட்ஸ்மேனும் இவரது யார்க்கர் பந்தினை அவ்வளவு எளிதாக அடித்து விட முடியாது. காலினை குறி பார்த்து ஸ்டம்பினை நோக்கி வீசப்படும் இவரது யார்க்கர் பந்துக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
கடந்த ஆண்டு காயத்தால் அவதிப்பட்ட இவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த சீசனில் கலந்து கொள்ள முடியவில்லை. தனது உடற்தகுதியில் கடினமாக உழைத்த அவர், அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்டார். மேலும் தனது பந்துவீச்சில் புதிய வேரியேஷன்களைக் கொண்டுவந்து தற்போது தனது பந்துவீச்சில் தனி முத்திரையை பதித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகக் களம் இறங்கி விளையாடி வரும் இவர், அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான ஊதா நிறத் தொப்பியும் வைத்திருக்கிறார். ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு வரும் ஜியோ சினிமாவுக்காக ஒரு பிரத்தியேக பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அதில் தொடக்கத்தில் தான் தடுமாறிய போது சச்சினின் அந்த வார்த்தைகள் தான் எனக்கு ஊக்கத்தை கொடுத்தன என்று கூறியிருக்கிறார்.
இது குறித்த அவர் கூறும் பொழுது
“100% பெர்பெக்ட்டான பந்து என்று ஒன்று கிரிக்கெட்டில்கிடையவே கிடையாது. எல்லா பந்துகளுக்குமே விக்கெட் எடுக்கும் திறன் உள்ளது. டி20 கிரிக்கெட் பொருத்தவரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனாலும் நான் வீழ்த்திய முதல் விக்கெட்தான் எனது மனதுக்கு நெருக்கமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் நான் இரவு நேரங்களில் கிரிக்கெட் விளையாடியதில்லை. பகல் நேரங்களில்தான் பெரும்பாலும் விளையாடுவேன். மைதானத்தில் ஈரம் இருக்கும், ஈரப்பதத்தின் தாக்கம் என்றெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.
இதையும் படிங்க:என்ன பண்ணனும்னு அவருக்கு தெரியும்.. அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தேவையற்றது.. கூறுகிறார் சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங்
அதெல்லாம் தெரியாமல் மூன்று பந்துகளை வீசியபோது விராட் கோலி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசினார். நான்காவது பந்தில் விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்தினேன். நான் நினைத்த இடத்தில் பந்து வீச முடியாமல் போனபோது சச்சினிடம் இது குறித்து கூறினேன். அப்போது அவர் “எதைப் பற்றியும் கவலைப்படாமல் உன்னுடைய ஒரே ஒரு நல்ல பந்தில் ஆட்டமே மாறிவிடும்”என்று கூறினார். அதன் பிறகு தான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினேன். நான் தடுமாறிய போது எனக்கு ஆதரவாக அப்படி ஒரு குரல் தேவைப்பட்டது” என்று கூறி இருக்கிறார்

