இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து 16வது ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் தோல்வி அடைந்து வெளியேறி இருக்கிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது .
2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் வைத்து நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அரசியல் காரணங்களால் இந்தியா பாகிஸ்தானிற்கு சென்று விளையாட மறுத்ததால் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து ஹைபிரிட் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானில் வைத்து நடைபெறும் போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தன. மீதம் இருக்கும் ஆட்டங்கள் இலங்கை தலைநகரான கொழும்பில் வைத்து நாளை முதல் நடைபெற இருக்கிறது.
நாளை நடைபெற இருக்கும் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன . இதனைத் தொடர்ந்து வருகின்ற 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக தடைபட்டதால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்ற போட்டியை கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கடந்த போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் மிகச் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் குவித்தார். இந்தியா 66 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது இவரும் அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டதோடு பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஐந்தாவது விக்கெட்டில் அதிக ரன் சேர்த்த இந்திய ஜோடி என்ற சாதனையும் படைத்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பரான கேஎல்.ராகுல் அணிக்கு திரும்பியிருப்பது இந்திய அணி நிர்வாகத்திற்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
கேஎல் ராகுல் அணிக்கு திரும்பியிருக்கும் நிலையில் இந்திய அணி அவரை ஆடும் லெவனில் சேர்க்குமா இல்லை இஸான் கிசான் உடன் களம் இறங்குவார்களா என்று கிரிக்கெட் விமர்சேகர்களிடையே மிகப்பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் இசான் கிசனை வைத்துத்தான் விளையாட வேண்டும் கேஎல் ராகுல் அணிக்கு திரும்பி இருக்கிறார் என்பதற்காக அவரை அணியில் சேர்க்கக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் உலகக் கோப்பை ஆட்டநாயகன் கௌதம் கம்பீர் இந்தியா அணிக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். அதன்படி ” இந்தியா ஃபார்மில் இருக்கும் இஷான் கிசானை வைத்து தான் பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாட வேண்டும் . தற்போது அவர்கள் கேஎல் ராகுலை அணியில் சேர்த்தால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்தியா நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டு இருக்கிறார் இஷான் கிஷான். கடந்த தொடரிலும் சிறந்த பார்மில் இருக்கும் ஒரு வீரரை வெளியே வைத்து விளையாடினால் அது நிச்சயமாக தோல்வியில்தான் முடியும் என இந்திய அணியை எச்சரித்திருக்கிறார் கம்பீர்.
சமீபத்தில் வெஸ்ட் இண்டிஸ் தீவுகளில் நடைபெற்ற மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் தொடர்ச்சியாக அரை சதம் எடுத்தார் இஷான் கிஷான். அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் அதிரடியாக 82 ரன்களை சேர்த்து இருக்கிறார். இதுபோன்று தொடர்ச்சியான ஃபார்மில் இருக்கும் ஒரு வீரரை அணியில் இருந்து வெளியே வைப்பது புத்திசாலித்தனமான யோசனையாக இருக்காது என பல முன்னால் வீரர்களும் இந்திய அணிக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர்.

