இந்திய வீரர்கள் பயன்படுத்தும் பேட்டில் ரப்பர் கலந்து செய்யப்பட்டு இருக்கிறது அதனால் அவர்கள் வெகு தூரம் பந்தை அடிக்கிறார்கள் என்று தான் சொல்லவில்லை என இலங்கை வீரர் பானுக ராஜபக்சே மறுத்திருக்கிறார்.
அவர் கூறியதாக வந்த செய்தியில், இந்திய வீரர்கள் பயன்படுத்தும் பேட் ஸ்பெஷல் முறையில் தயாரிக்கப்படுகிறது அதில் ரப்பர் கலந்துள்ளது, எனவே அவர்கள் அதிரடியாக விளையாடுகிறார்கள், அந்த பேட் நாமெல்லாம் வாங்க முடியாது, இந்திய வீரர்களுக்கு மட்டுமே விற்கப்படும், இது எல்லா வீரர்களுக்கும் தெரியும் என்று சொல்லப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்து இருக்கும் அவர் ” என்னுடைய பேட்டி ஒன்று தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாக எனக்கு தெரிய வந்திருக்கிறது. எனவே நான் சுருக்கமான முறையில் அதற்கு விளக்கம் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய பேச்சின் மொழிபெயர்ப்பு தவறான முறையில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது”
“நான் இந்திய கிரிக்கெட்டை பாராட்டிதான் பேசி இருந்தேன். முன்னேற்றம் அடைந்திருக்கிறது, அவர்களுடைய அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு என மிகவும் சிறப்பாக இருக்கிறது, அவர்களுடைய உள்நாட்டு பேட் தயாரிப்பு உலகிலேயே மிகச் சிறந்தது என்று கூறியிருந்தேன். திரும்ப யோசிக்கும் பொழுது நான் இன்னும் கொஞ்சம் தெளிவாக பேசி இருக்கலாம் என்று உணர்ந்தேன். இந்திய கிரிக்கெட்டை நான் எப்பொழுதும் மதிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

