சாம்பியன்ஸ் டிராபி.. புதிய எக்ஸ்பிரஸை களமிறக்கும் பங்களாதேஷ் அணி… இந்தியாவிற்கு எதிரான திட்டம் பலிக்குமா

8 வருடங்களுக்குப் பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் வைத்து நடைபெறும் இந்த போட்டி தொடரில் உலகின் டாப் 8 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன. 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம் பெற்றுள்ளது. குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற குரூப் ஏ பிரிவின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் குரூப் ஏ பிரிவில் நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் துபாயில் மோத இருக்கின்றன. டி20 நடப்புச் சாம்பியனான இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரையும் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முழு தன்னம்பிக்கையுடன் உள்ளது.

- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை கைப்பற்றுவோம் என பங்களாதேஷ் அணியின் கேப்டன் சான்டோ நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். சிறப்பான திட்டங்களுடன் முதல் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்துவதோடு சாம்பியன்ஸ் டிராபி தொடரை பங்களாதேஷ் அணி வெல்லும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். பங்களாதேஷ் அணி சமீபத்திய ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர்களில் தோல்விகளை சந்தித்திருந்தாலும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்படும் என அந்த அணியின் நிர்வாகமும் தெரிவித்திருக்கிறது.

மேலும் பங்களாதேஷ் அணி தங்களின் அதிவேக பந்துவீச்சாளரான நஹித் ரானாவை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் களமிறக்க இருக்கிறது. பங்களாதேஷ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெற்று விளையாடிய இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 3 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கும் ரானா இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் பங்களாதேஷ் அணியில் 150 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வீசக்கூடிய ஒரே பவுலர் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது வேகத்தின் மூலம் இந்தியா உட்பட எதிரணிகளை திணறடிக்கும் முயற்சியில் பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இவரை தேர்ந்தெடுத்திருக்கிறது. இன்று நடைபெற இருக்கும் இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் இவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவது குறித்து பேசியிருக்கும் ரானா, உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுவது மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். மேலும் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசிப்பதாக குறிப்பிட்ட அவர் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் தனது வேகம் மற்றும் பவுன்ஸ் மூலம் எதிரணி வீரர்களை வீழ்த்தி பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன் எனவும் கூறி இருக்கிறார்.

2017 ஆம் வருட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சதமெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று மோத உள்ள நிலையில் பங்களாதேஷ் அணியின் புதிய திட்டம் இந்திய அணிக்கு சவாலாக இருக்குமா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles