2025 ஆம் வருடத்திற்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கு முன்பாக பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் கலந்து கொண்ட முத்தரப்பு கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
கராச்சி நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 45.2 ஓவர்களில் 243 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து வெற்றி பெற்றதோடு முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் கோப்பையையும் கைப்பற்றியது. நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 57 ரன்களும் டாம் லேதம் 52 ரன்களும் எடுத்தனர்.
முன்னதாக முதலில் பேட்டிங் செய்து விளையாடிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சில் 242 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் அலி அகா ஆகியோர் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடி முறையே 46 மற்றும் 45 ரன்களில் ஆட்டமிழந்தனர். மேலும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரராக இறங்கிய முன்னாள் கேப்டன் பாபர் அசாம் விரைவாக 6,000 ரன்களை கடந்த சர்வதேச வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும் நேற்றைய போட்டியில் இவர் 34 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6,000 ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்க அணியின் ஹாசிம் அம்லாவுடன் பகிர்ந்திருக்கிறார். நேற்றைய போட்டியின் ஏழாவது ஓவரில் பாபர் அசாம் இந்த சாதனையை படைத்தார். இதன் மூலம் 123 இன்னிங்ஸ்களில் விளையாடி 6000 ரன்களைக் கடந்து பாபர் அசாம் சாதனை படைத்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் துவக்க வீரர் ஹாசிம் அம்லாவும் 123 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை தற்போது பாபர் அசாம் சமன் செய்துள்ளார. மேலும் பாபர் அசாம், விராட் கோலியின் சாதனையையும் இந்த போட்டியில் முறியடித்திருக்கிறார். 123 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை கடந்ததன் மூலம் ஆசியாவில் மிகக் குறைவான போட்டிகளில் 6000 ரன்களைக் கடந்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 136 இன்னிங்ஸ்களில் விளையாடி 6000 ரன்களை கடந்தது இதற்கு முன் சாதனையாக இருந்தது. மேலும் நேற்றைய போட்டியில் பாபர் அசாம் இதனை முறியடித்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்காக ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 6000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் பாபர் அசாம் படைத்திருக்கிறார். இதற்கு முன் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சையத் அன்வர் 162 போட்டிகளில் 6000 ரன்களை கடந்தது சாதனையாக இருந்தது. நேற்றைய போட்டியின் மூலம் பாபர் அசாம் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
மேலும் பாபர் அசாம் பல சாதனைகளை படைத்தாலும் அவரது நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து பாபர் அசாமை விமர்சனம் செய்து வருகின்றனர். நேற்றைய போட்டியில் அவர் உலக சாதனை படைத்திருந்த போதும் விரைவாக பெவிலியனுக்கு திரும்பும் முதல் வீரரும் அவர்தான். அந்த சாதனையையும் பாபர் அசாம் தான் படைத்துக் கொண்டிருக்கிறார் என சமூக வலைதளங்களில் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். 2024 ஆம் வருட டி20 உலக கோப்பை தொடருக்குப் பிறகு பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இது அவர் மீது பல விமர்சனங்கள் என காரணமாக அமைந்திருக்கிறது.

