2023 ஆம் வருடத்தில் நவம்பர் 19ஆம் தேதி இந்திய ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடியது. லீக் போட்டிகளில் இந்தியா அனைத்து நாடுகளையும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகித்தது. மேலும் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சொந்த நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை இந்தியா கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் இருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அணியின் தோல்வி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.
பல கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த தோல்வியால் மிகவும் மனமுடைந்தனர். மேலும் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் மற்றும் முகமது சிராஜ் போன்ற வீரர்களும் மைதானத்திலேயே கண்ணீர் வடித்தனர். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்வி நாடெங்கிலும் உள்ள ரசிகர்களையும் வீரர்களையும் மிகப்பெரிய வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும் வருத்தத்தையும் மீண்டும் ஞாபகப்படுத்தி இருக்கிறார் ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த மார்னஸ் லபுசேன்.
அவர் சமூக வலைதளத்தில் உலகக்கோப்பை இறுதிப் போட்டி குறித்து தற்போது பகிர்ந்திருக்கும் நிகழ்வு இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றி இருக்கிறது. 2023 ஆம் வருட உலகக்கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய இந்தியா 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 47 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய மார்னஸ் லபுசேன் துவக்க வீரரான டிராவஸ் ஹெட்டுடன் இணைந்து நான்காவது விக்கெட்க்கு 192 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
ஒரு முனையில் ஹெட் அதிரடியாக ஆட மறுமுனையில் ஆடிய லபுசேன் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதோடு நிதானமாக ஆடி ஹெட் ரன் குவிக்க உதவினார். இவர்களது பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக உலக கோப்பையை வெல்ல முக்கியமானதாக அமைந்தது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சதம் எடுத்த ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருக்கு துணையாக ஆடிய லபுசேன் 110 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.
இவர்கள் இருவரது சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி உலகச் சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக கைப்பற்றியது. இந்நிலையில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் லபுசேன் பயன்படுத்திய கிரிக்கெட் பேட்டின் புகைப்படத்தை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டு இருக்கும் அவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தான் பயன்படுத்திய பேட் தற்போது ரிட்டயர்ட் ஆகிவிட்டது என அறிவித்துள்ளார்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் போது லபுசேன் பயன்படுத்திய கிரிக்கெட் பேட் முற்றிலுமாக சேதம் அடைந்திருக்கிறது. இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து அவர் தனது கிரிக்கெட் மட்டை ஓய்வு பெற்றிருப்பதாக அறிவித்துள்ளார். இவரது இந்த பதிவு இந்திய ரசிகர்களை வெறுப்பு ஏற்றுவது போல் அமைந்திருக்கிறது. மேலும் இந்தப் பதிவு உலகக்கோப்பை இறுதி போட்டியின் போது இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்ட மன வருத்தத்தை மீண்டும் ஞாபகப்படுத்துகிறது என பல கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் கசப்பான அனுபவங்களை எங்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள் என பல இந்திய ரசிகர்களும் லபுசேன் பதிவில் கமெண்ட் செய்துள்ளனர்.