10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர் கவாஸ்கர் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கம்மின்ஸ் படை தகுதி பெற்று இருக்கிறது. எனினும் தொடர்ந்து மூன்றாவது முறையாக பைனலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தற்போது அந்த வாய்ப்பை இழந்து இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் இருந்ததால் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது.
கேப்டன் ரோகித் சர்மா மோசமான பேட்டிங் ஃபார்மில் இருந்ததால் அவர் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதனால் பும்ரா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இந்திய அணி 185 ரன்கள் மட்டும் எடுக்க ஆஸ்திரேலியா அணியும் பேட்டிங்கில் தடுமாறி 181 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் வெறும் நான்கு ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 250 ரன்கள் முதல் 300 ரன்கள் குவித்தால் வெற்றி பெற்று விடலாம் என்ற ஆசையில் ரசிகர்கள் இருந்தனர்.
ஆனால் இந்திய அணி வீரர்கள் வழக்கம்போல் ஏமாற்றினர்.கில், விராட் கோலி, கே.எல் ராகுல், ஜெய்ஸ்வால், ஜடேஜா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க பண்ட் மட்டும் டி20 கிரிக்கெட் விளையாடுவது போல் 33 பந்துகளின் 61 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் இந்திய அணி கைவசம் நான்கு விக்கெட் இருந்த சூழலில் 141 ரன்கள் உடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கியது.
மேலும் பாட் கம்மின்ஸ் மற்றும் போலந்து ஆகியோர் அபாரமாக பந்து வீசி இந்திய அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார்கள். இதனால் இந்திய அணி 157 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதன் மூலம் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் மூன்று ஓவரிலே 35 ரன்கள் விளாசியது.
டி20 கிரிக்கெட் போல் ஆறு புள்ளி இரண்டு ஓவர்கள் எல்லாம் 50 ரன்களை ஆஸ்திரேலியா கடந்தது. இந்த சூழலில் பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலியா விக்கெட்டை வீழ்த்தினார். குறிப்பாக லாபஸ்சென் மற்றும் ஸ்மித் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற ஆஸ்திரேலிய அணி 58 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எனினும் டிராவிஸ் ஹெட் மற்றும் வெப்ஸ்டர் ஆகியோர் முறையே 34 மற்றும் 39 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலிய அணி 27 ஓவர் முடிவில் எல்லாம் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி தொடரை இழந்தது.
முதல் இன்னிங்ஸில் காயம் காரணமாக வெளியேறிய பும்ரா இரண்டாவது இன்னிங்சில் பந்து வீச வரவில்லை. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் மோதுகிறது.

