டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று இறுதி போட்டிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில் மீதமுள்ள அமெரிக்கா, ஸ்காட்லாந்து, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்த மூன்று இடங்களைப் பிடிக்க போட்டி போடுகின்றன. இதில் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியது.
அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் வந்த நிலையில், மூன்றாவது போட்டியில் ஓமனுக்கு எதிராக இங்கிலாந்து அணி 19 பந்துகளிலேயே 50 ரன்கள் இலக்கை வெற்றி பெற்று ரன்ரேட்டில் ஓரளவு தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் ஸ்காட்லாந்து அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகள் உடன் அதுவும் சூப்பர் 8 சுற்றில் நீடிக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு கடைசி ஆட்டமாக நமீபியாவுடன் ஒரு போட்டி இருக்கிறது.
அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு இருக்கும். இருப்பினும் ஸ்காட்லாந்து அணி தனது அடுத்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சந்திக்க உள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெறும் என்று கருதினாலும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஹேசில் வுட் கூறிய கருத்து தற்போது கவனத்தை பெற்று வருகிறது.
அதில் அவர் “இங்கிலாந்து அணி தங்களது பரம எதிரி என்றும், அந்த அணிக்கு எதிராக தங்கள் டி20 கிரிக்கெட்டில் தடுமாறி வருவதாகவும்” கூறி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணி அடுத்த சுற்று முன்னேறக்கூடாது என்று ஆஸ்திரேலியா அணி நினைத்தால் ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வி அடைய கூட வாய்ப்பு இருக்கிறது.
எடுத்துக்காட்டாக 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிக புள்ளிகள் பெறுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் வேண்டுமென்றே மெதுவாக விளையாடியது. 111 ரன்கள் இலக்கை எடுக்க ஆஸ்திரேலியா அணியின் 40 ஓவர்கள் வரை எடுத்துக் கொண்டது. கிரிக்கெட்டில் வெற்றியடைய எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஆஸ்திரேலியா அணி ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வியடைய கூட தயங்காது என்றும் யோசிக்க தோன்றுகிறது.
இதையும் படிங்க:மக்கள் என்னை நேசிக்க காரணமே இதுதான்.. நான் என்னை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.. தல தோனி பேட்டி
ஆனால் அப்படி ஆஸ்திரேலியா அணி தோற்றால் ஐசிசி 2.11 விதிமுறையை ஆஸ்திரேலிய அணி மீற வேண்டும். இந்த விதியின் படி “பொருத்தம் இல்லாத காரணத்திற்காக ஒரு அணி வேண்டுமென்றே தோல்வியை தழுவினால் அது மற்ற அணிகளின் நிலைமையை பாதிக்கும்” என்று கூறுகிறது. இதையும் மீறி ஆஸ்திரேலியா அணி செய்தால் கேப்டனுக்கு நான்கு கருப்பு புள்ளிகள், 50 சதவீதம் போட்டி அபராதம் மற்றும் இரண்டு போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்படும்.

