இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்கக்காரர் சாம் கான்ஸ்டாஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் உரசிக் கொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அது குறித்து கான்ஸ்டாஸ் சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிராக நான்காவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா அணி தற்போது விளையாடி வரும் நிலையில் தொடக்க ஆட்டக்காரராக உள்நாட்டு தொடரில் கலக்கிய சாம் கான்ஸ்டாஸ் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். இந்திய அணிக்கு எதிராக விளையாடும் நிலையில் அவர் பும்ராவுக்கு எதிராக அபாரமாக விளையாடியதால் இந்தியாவின் பந்துவீச்சு பின்னடைவை சந்தித்தது.
இந்த சூழ்நிலையில் போட்டியின் போது மைதானத்தின் நடுவே விராட் கோலி சாம் கான்ஸ்டாஸ் மீது உரசிக் கொண்டு செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த சூழ்நிலையில் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவிற்கு பின்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கான்ஸ்டாஸ் விராட் கோலி தன்னை உரசி சென்றார் எனவும் அதற்குப் பிறகுதான் எங்களுக்கிடையே வாக்குவாதம் ஆனது என்று சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அந்த நேரத்தில்தான் எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. விராட் கோலி வரும் போது நான் எனது கையுறைகளை சரி செய்து கொண்டிருந்தேன். ஆனால் விராட் கோலி இதனை வேண்டுமென்றே செய்தாரா? அல்லது தன்னிச்சையாக நடந்ததா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது சகஜம்தான். எனவே இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க:பும்ரா ஓவரில் 32 ரன்கள்.. அந்த பையனுக்கு பயமில்ல.. கோலி & பும்ராவை சண்டைக்கு இழுத்த 19 வயது வீரர் கொன்ஸ்டாஸ்
இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “எனது உள்ளுணர்வின்படி விராட் கோலி பந்தை கையில் வைத்துக்கொண்டு அதை பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார். மேலும் கான்ஸ்டாஸ் விராட் கோலி வருவதை கவனிக்கவில்லை. இதனால் இது வேண்டுமென்றே நடந்த சம்பவம் போல தெரியவில்லை. பொதுவாக சாலையில் நாம் நடக்கும்போது எதிரே ஒருவர் வருவதை பார்த்து நாம் தள்ளி நடப்பதில்லையா அதேபோல விராட் கோலி இதனை செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

