2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் துவங்குவதற்கு 20-க்கும் குறைவான நாட்களே இருக்கின்றன. இதனை முன்னிட்டு அனைத்து அணிகளும் உலகக்கோப்பை போட்டிகளுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவில் வைத்து நடைபெறுவதால் உலகின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனமும் இந்தியாவின் மீது திரும்பி இருக்கிறது.
இந்திய அணியும் ஐசிசி போட்டிகளை வென்று 10 வருடங்களுக்கும் மேலாக இருப்பதால் இந்த வருடம் சொந்த நாட்டில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலும் கடந்த மூன்று உலகக் கோப்பை போட்டிகளிலும் ஹோஸ்ட் நாடுகள் என்று அழைக்கப்படும் போட்டியை நடத்திய நாடுகளே உலகக் கோப்பையை வென்றுள்ளது.
இது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது மேலும் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கோப்பையை வென்று இந்தியா தங்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. சரியான திட்டமிடலுடன் ஆசிய கோப்பையில் களம் கண்ட இந்திய அணி வலுவான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் வெற்றியைப் பெற்று எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் வெவ்வேறு சூழ்நிலைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கின்றனர். முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷான், இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா மற்றும் கில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் என ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு சூழ்நிலைகளிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சிறப்பாக செயல்பட்டனர்.
மேலும் பந்து வீச்சிலும் ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா என அனைவரும் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கை அளித்துள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் லெஜன்ட் கிரிக்கெட்டர் ஆடம் கில்க்ரிஸ்ட் உலகக் கோப்பையின் அரை இறுதிக்கு தகுதி பெறும் நான்கு அணிகள் பற்றிய தனது கணிப்பை தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணியின் அதிரடி விக்கெட் கீப்பரான இவர் 1999, 2003, ,2007 என ஹாட்-ட்ரிக் உலக கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்று இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2007 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சதம் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றவர் என்பதும் சிறப்பு மிக்கதாகும்.
ஆடம் கில்கிரிஸ்ட் இந்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக் கோப்பையின் அரை இறுதிக்கு தகுதி பெறும் என தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு ஆடுகளங்களின் தன்மை மற்றும் போட்டி நடைபெறும் சூழல் அதிகமான சாதகங்களை தருகின்றன என்று கூறிய அவர் மேலும் இந்த அணிகள் வலுவாக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை பொருத்தவரை சம பலத்துடன் வலுவாக இருப்பதால் இந்த அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெறும் எனக் கூறினார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டின் தாக்கத்தால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் இந்திய ஆடு களங்களின் தன்மைக்கு ஏற்றவாறு ஆட முடியும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

