கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் அளவுக்கு ஃபீல்டிங்கும் மிக முக்கிய பங்கைக் கொண்டது. சிறந்த கேட்சுகள் தான் போட்டிகளை வெல்லும் என்ற ஓர் பழமொழியும் உள்ளது. சமீபத்தில் பல ஐ.பி.எல் போட்டிகள் உதாரணம். குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவிடம், கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த ஃபீல்டர் யார் எனக் கேட்கப்பட்டபோது, அவர் உடனடியாக தனது முன்னாள் சக வீரரான ஜடேஜாவையேத் தேர்ந்தெடுத்தார்.
கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக விளங்கும் ரவீந்திர ஜடேஜா, பேட் மற்றும் பந்து மட்டுமல்ல, களத்தில் தனது மின்னல் வேகத்தாலும் புகழ்பெற்றவர். 36 வயதாகியும், பந்து அவரைக் கடந்து செல்வது அரிது. கேட்சுகளை அவர் தவரவே விடுவதில்லை. ஜடேஜாவின் இந்த சிறப்பு, இளம் வீரர்களுக்கு ஒரு முன்மாதிரி.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில், ” அப்போதும் சரி இப்போதும் சரி. யார் சிறந்த ஃபீல்டர் ? ” என நெஹ்ராவை நோக்கி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ நான் பல சிறந்த ஃபீல்டர்களைப் பார்த்திருக்கிறேன். ஜான்டி ரோட்ஸ் 30 யார்ஸ் வட்டத்திற்குள் மிகச் சிறந்தவர். ஆனால், ஆல்-ரவுண்ட் ஃபீல்டிங்கில் ஏபி டிவிலியர்ஸ், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆகியோர் சிறந்தவர்களாக நினைவுக்கு வருகிறார்கள். ஆனால், நான் ஜடேஜாவை முதலிடத்தில் வைப்பேன். “
அதற்கு காரணமாக, ” 2008-09ல் அறிமுகமானபோது இருந்த அதே உற்சாகம் இப்போதும் இருக்கிறது. அவரது உடற்தகுதி ஆச்சரியமளிக்கிறது. அவர் என்ன சாப்பிடுகிறார் என்று தெரியவில்லை. ஏதோ வித்தியாசமாக சாப்பிடுகிறார் என்றால், அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்,” என்று நெஹ்ரா நகைச்சுவையுடன் கூறினார்.

