சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான ரோகித் சர்மா ஓய்வை அறிவித்தார். ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்பட்டது. 2027 உலகக்கோப்பையை மனதில் வைத்தே ரோகித் சர்மா இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது.
சுப்மன் கில் ஆதிக்கம்
இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பை சுப்மன் கில் வசம் ஒப்படைக்க பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஆகஸ்ட் மாதம் நடக்கவிருந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் அடுத்ததாக டிசம்பர் மாதம் தான் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் என்று தெரிகிறது. ஏற்கனவே ரோகித் சர்மாவுக்கு ஃபிட்னஸ் பிரச்சனை இருந்து வரும் நிலையில், இந்திய அணியிலும் இளம் வீரர்கள் பலரும் வேகமாக வளர்ந்து வருகின்றனர். இதனால் ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா ஓய்வு?
சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக நல்ல முதிர்ச்சியை வெளிப்படுத்தி வருவதால், அவரது தலைமையில் 2027ல் இந்திய அணி உலகக்கோப்பையை எதிர்கொள்வதே சிறந்த முடிவாக இருக்கும். அவருக்கு துணையாக ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய அணியின் துணைக் கேப்டனாக கொண்டு வர பிசிசிஐ ஆலோசித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் விரைவில் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தில் விராட் கோலியிடமும் இதே நெருக்கடி கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

