ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகி இருக்கிறார். அவருக்கு பதவி உயர்வு அளிக்க ராஜஸ்தான் நிர்வாகம் முன் வந்த போதும், அதனை ஏற்காமல் ராகுல் டிராவிட் விலகி இருக்கிறார். இதன் மூலமாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது உறுதியாகி இருக்கிறது.
ராஜஸ்தான் அணியில் சர்ச்சை
ரியான் பராக்கை கேப்டனாக நியமனம் செய்வதற்காக சஞ்சு சாம்சனை தியாகம் செய்யவும் அந்த அணியின் உரிமையாளர்கள் தயாராகிவிட்டனர். இதனால் சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டி வந்தது. ஆனால் டிரேட் பேச்சுவார்த்தையில் ஒத்து வரவில்லை. இதனால் ஐபிஎல் மினி ஏலத்தில் சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சஞ்சு சாம்சன் மட்டுமல்லாமல் மற்றொரு இந்திய நட்சத்திர வீரரும் ராஜஸ்தான் அணியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் விலகலைத் தொடர்ந்து ராகுல் டிராவிட், யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கேப்டனாக முன்னிலைப்படுத்தினார். அதனை அந்த அணி நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் ஜெய்ஸ்வாலும் விலக முடிவு எடுத்திருக்கிறார்.
சிஎஸ்கே அணியில் ஜெய்ஸ்வால்
ராஜஸ்தான் அணியில் மிகப்பெரிய ஊதியம் பெற்றாலும், ஜெய்ஸ்வாலுக்கு கேப்டனாகும் விருப்பம் இருக்கிறது. அதனை ஏற்கனவே பலமுறை ஜெய்ஸ்வால் வெளிப்படுத்தி இருக்கிறார். கன்சிஸ்டன்சியுடன் ஜெய்ஸ்வால் ஆடி வரும் நிலையில், அடுத்தக் கட்டமாக கேப்டனாவதே இலக்காக உள்ளது. இதனால் ராஜஸ்தான் அணியில் இருந்து விலகி, ஐபிஎல் மினி ஏலத்தில் கலந்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறார்.
சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய மிகப்பெரிய இரு வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்திற்கு வருகிறார்கள். இருவருமே சிஎஸ்கே அணிக்காக விளையாட விரும்பினாலும், சிஎஸ்கே அணிக்கு ஒரு இடதுகை தொடக்க வீரர் அவசியமாக இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் முழு மூச்சாக சென்று ஜெய்ஸ்வாலை வாங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு தோனி திட்டத்தை வடிவமைக்க ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

