ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மார்ச் 9ம் தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் சிறப்பாக தயாராகி வருகின்றனர். இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
இதற்கிடையே ரோகித் சர்மா ஓய்வு குறித்த விவாதம் சோசியல் மீடியாவில் எழுந்துள்ளது. ஏற்கனவே டி20 உலகக்கோப்பை வென்ற பின் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேபோல் விராட் கோலியும் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.
38 வயதாகும் ரோகித் சர்மா
இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 37 வயதாகிவிட்டது. இன்னும் ஒரு மாதத்தில் 38 வயதை எட்டிவிடுவார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மோசமாகிவிட்டது. அதிகமாக ஓட முடியாமல் பவுண்டரி, சிக்சர்கள் மூலமாகவே ரன்களை சேர்த்து வருகிறார்.
இதே பாணியை ஒருநாள் கிரிக்கெட்டிலும் பின்பற்றி வருகிறார். 20 பந்துகளுக்கு 40 ரன்களை அடித்துவிட்டு ஃபார்மில் இருப்பது போல் காட்டி வருகிறார். இதனால் சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு பின் ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் அவருடன் ஆலோசித்துள்ளனர்.
நிரந்தர கேப்டன் தேவை
இந்த சம்பவம் குறித்து பிசிசிஐ நிர்வாகி கூறும் போது, ரோகித் சர்மா இன்னும் தன்னிடம் கொஞ்சம் கிரிக்கெட் எஞ்சி இருப்பதாக நம்புகிறார். ஆனால் எதிர்கால திட்டம் குறித்து சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறுவது என்பது அவரின் முடிவுதான். ஆனால் கேப்டன்சி குறித்து நிச்சயம் ஒரு விவாதம் இருக்கும்ன். அதேபோல் 2027 உலகக்கோப்பைக்கு நிரந்தர கேப்டன் தேவை என்பதை ரோகித் சர்மா உணர்ந்துள்ளார்.
விராட் கோலியுடனும் இதேபோன்ற ஆலோசனை இருந்தது. ஆனால் ரோகித் சர்மாவுடன் நடந்த அளவிற்கு பரபரப்பானதாக அது இல்லை. ஆனால் என்ன முடிவாக இருந்தாலும், ரோகித் சர்மாவின் வார்த்தைக்கு பிசிசிஐ காத்திருக்கும். ஒருவேளை அவர் ஓய்வு பெற முடிவு செய்தால், என்ன செய்ய வேண்டுமோ அதனை பிசிசிஐ செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

