நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் கேகேஆர் – ஆர்சிபி இடையில் நடந்து வருகிறது. இந்த சீசனில் கேகேஆர் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேகேஆர் அணி ரஹானேவை வாங்கிய போது அந்த அணியின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதையடுத்து கேகேஆர் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட போது, பலரும் திட்டி தீர்த்தனர்.
கேப்டனாக ரஹானே
ஆனாலும் அஜிங்கியா ரஹானேவின் உள்ளூர் கிரிக்கெட் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. சையத் முஷ்டாக் அலி தொடரிலேயே ரஹானே தனது பேட்டிங் திறமையை நிரூபித்திருந்தார். இதனை பார்த்துதான் கேகேஆர் அணியின் நிர்வாகம் அவருக்கு கேப்டன்சியை கொடுத்திருந்தது.
இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் கேகேஆர் அணியின் ரசிகர்கள் அனைவருக்கும் ரஹானேவின் ஆட்டம் ஷாக்கை கொடுத்துள்ளது. ஒரு ஓவர் அமைதி காத்த ரஹானே, அதன்பின் ஃபீல்டர்களை கணித்து ஆடிய ஆட்டம் ஆச்சரியத்தை கொடுத்தது. யாரெல்லாம் சந்தேகப்பட்டார்களோ அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் 25 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.
25 பந்தில் அரைசதம்
சிறப்பாக ஆடிய ரஹானே 31 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 56 ரன்களை விளாசி அசத்தினார். 2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எப்படியான ஒரு ஆட்டத்தை ரஹானே வெளிப்படுத்தினாரோ, மீண்டும் அதே ஃபார்மில் கேகேஆர் அணியின் கேப்டனாக மிரட்டி இருக்கிறார். இதனால் ரஹானேவை அடிப்படை தொகைக்கு வாங்கும் வாய்ப்பை மீண்டும் சிஎஸ்கே அணி தவறவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ரஹானேவின் அதிரடியாக கேகேஆர் அணியின் ஸ்கோர் 10 ஓவர்களிலேயே 100 ரன்களை கடந்தது. ஆனால் பின்னர் வந்த வீரர்களின் மோசமான ஆட்டம் காரணமாக கேகேஆர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதனால் ஆர்சிபி அணிக்கு சாதகம் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

