அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக பிசிசிஐ தரப்பில் இந்திய அணி வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக வீரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் இருக்க முன் கூட்டிய அனுமதி பெற வேண்டும் என்று விதிகள் கொண்டு வரப்பட்டன.
பிசிசிஐ செய்த மாற்றம்
குடும்பத்தினருக்கு 19 நாட்கள் கொண்ட சுற்றுப்பயணத்தில் அனுமதியில்லை என்றும், 45 நாட்கள் கொண்ட சுற்றுப்பயணத்தின் போது மட்டுமே அனுமதி என்றும் விதிகள் திருத்தப்பட்டன. அதேபோல் குடும்பத்தினர் போட்டிகளை பார்க்கவும் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்பன போன்ற விதிகள் மாற்றம் செய்யப்பட்டன.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்த விதிகள் பின்பற்றப்பட்டது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பின் பிசிசிஐ விதிகளுக்கு விராட் கோலி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதில், நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு பாருங்கள். உங்கள் குடும்பத்தினர் உங்களுடன் இருக்க வேண்டுமா என்று கேட்டால், அனைவரும் ஆம் என்றே சொல்வார்கள்.
விராட் கோலி புலம்பல்
பயிற்சிக்கு பின் ஹோட்டல் அறைக்கு சென்று தனிமையில் இருந்து புலம்ப முடியாது. அப்படி இருக்கும் போது என்னால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. குடும்பத்தினருடன் இருக்கும் போது ஆட்டத்தை கூடுதல் பொறுப்புடன் அணுக முடிகிறது. கிரிக்கெட் பொறுப்புகள் முடிவடைந்த பின் சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
தற்போது விராட் கோலியின் எதிர்ப்புக்கு பின் பிசிசிஐ அந்த விதிகளில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விராட் கோலியின் கருத்துக்கு இந்நாள் மற்றும் முன்னாள்ம் வீரர்களின் ஆதரவு அதிகளவில் இருந்தது. இதனால் மாற்றம் செய்ய பிசிசிஐ முன் வந்துள்ளது. இதனால் கிரிக்கெட் பயணங்களின் போது, வீரர்கள் தங்களின் குடும்பங்களை அழைத்து வர அனுமதி மட்டுமே பெற வேண்டும் என்று விதியில் திருத்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

