16-வது ஆசியக் கோப்பையின் முதல் சுற்று போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 291 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குசால் மண்டிஸ் 92 ரன்களும் பதும் நிசங்கா 41 ரன்களும் அசலங்கா 36 ரன்கள் மற்றும் துணித் வெல்லலாகே 33 ரண்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சில் குல்பதின் நைப் 60 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணி நிர்ணயத்திற்கும் 292 ரன்களை 37.1 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் களம் இறங்கியது. ஆனால் அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜத்ரான் இருவரும் முறையே 4 மற்றும் 7 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இலக்கை துரத்துவதற்காக மூன்றாவது இடத்தில் களம் இறக்கப்பட்ட குல்பதின் நைப் 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதுவரை போட்டி இலங்கையின் பக்கமே சென்று கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா மற்றும் அணியின் கேப்டன் ஷஹீதி இருவரும் சேர்ந்து சரிவிலிருந்து மீட்டனர். ஆப்கானிஸ்தான் அணி 121 ரன்கள் எட்டிய போது ரஹ்மத் ஷா 40 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் அனுபவமிக்க வீரர் முகமது நபி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் கைநழுவி சென்று கொண்டிருந்த போட்டியை ஆப்கானிஸ்தான் அணியின் பக்கம் திருப்பினார்.
அதிரடியாக ஆடிய இவர் 32 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் இவர் ஆட்டம் இழக்கும் போது போட்டி முழுவதுமாக ஆப்கானிஸ்தான் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. மேலும் அவர்கள் ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருந்தன. இதனைத் தொடர்ந்து ஆட வந்த கரீம் ஜன்னத் 13 பந்துகளில் 22 ரண்களும் நஜிபுல்லா ஜத்ரான் 15 பந்துகளில் 23 ரண்களும் எடுத்து ஆட்டம் இழக்க ஆப்கானிஸ்தான் அணி வெற்றி இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தது.
ஒரு முனையில் வீரர்கள் அதிரடியாக ஆடி விக்கெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் நங்கூரமாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ஷஹீதி 66 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . 36-வது ஓவரின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 277 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த அணி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் 7 பந்துகளில் 15 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் இலங்கை அணியின் வெல்லலாகே வீசிய ஓவரில் ரஷீத் கான் 3 பவுண்டரிகள் அடிக்க ஒரு பந்தில் மூன்று ரன்கள் எடுத்தால் ஆப்கானிஸ்தான் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலை உருவானது. மேலும் அவர்கள் இந்த போட்டியில் மட்டும் வெற்றி பெற 78 ரன் பந்துகளில் 3 ரன்கள் எடுத்தால் போதும் என்ற சூழ்நிலை நிலவியது.
இதனைத் தொடர்ந்து தனஞ்செய டிசில்வா வீசிய முதல் பந்தை பவுண்டரி அடிக்க முயன்ற முஜிபுர் ரஹ்மான் எல்லை கோட்டு அருகே கேட்ச் ஆகி வெளியேறினார் . இதனால் ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது. மேலும் மூன்று ரன்கள் எடுத்து வெற்றியாவது பெறலாம் என்று இருந்த நிலையில் அணியின் கடைசி பேட்ஸ்மேன் ஆன ஃபசாதுல்லாஹ் அதே ஓவரில் எல்பிடபிள்யூ ஆனதால் இலங்கை அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பதினாறாவது ஆசியக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டி ரசிகர்களை விறுகுறுப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது.

