இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 8 போட்டி இன்று இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆன ஜோனதன் டிராட் ஐபிஎல் தொடரால் இந்திய அணிக்கு ஏற்படும் பலவீனம் குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் லீக் சுற்றில் வெற்றிகளை பெற்று தற்போது முதல்முறையாக சூப்பர் எயிட் சுற்றில் மோத உள்ளன. இந்த இரண்டு அணிகளில் பேட்டிங்கை பொருத்தவரை இந்திய அணி பலமாக காணப்பட்டாலும், பந்துவீச்சில் அதிலும் குறிப்பாக சுழற் பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் கையே ஓங்கி உள்ளது.
அதிலும் குறிப்பாக உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர் ரசித் கான் அந்த அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பேட்டிங்கிலும் ஓரளவு நல்ல பங்களிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியில் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்திய அணியும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் சமபலம் வாய்ந்ததாகவே காணப்படுகிறது. எனவே கிட்டத்தட்ட இரண்டு அணிகளும் சம பலம் வாய்ந்ததாக காணப்படும் நிலையில் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு பஞ்சம் இருக்காது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் ஆப்கானிஸ்தான் அணியில் உள்ள பல வீரர்கள் இந்தியாவில் ஐபிஎல் விளையாடி இருப்பதால் இந்திய வீரர்கள் பலவீனம் தெரியும் என்ற சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது ” எங்களிடம் ஐபிஎல் விளையாடும் ஒன்பது முதல் 10 வீரர்கள் தற்போது உலகக்கோப்பை தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இந்திய வீரர்களின் பலவீனம் குறித்து நன்கு தெரியும். இருப்பினும் இந்திய வீரர்களும் எங்கள் வீரர்களின் பலவீனங்களை அறிந்து வைத்திருப்பார்கள். குறிப்பாக பகல் நேரத்தில் விளையாடும் போட்டி எங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் பகல் நேரத்தில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம்.
இதையும் படிங்க:6 பந்து 30 ரன்.. ஒரே ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடிய பில்சால்ட்.. பரிதாபமான ஷெப்பர்ட்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
இந்தியா நிச்சயம் மிகச் சிறந்த அணி. அந்த அணியே இன்றைய போட்டியில் வெல்லும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. ஆனால் அதுவே அவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும். நாங்கள் பின்தங்கிய அணியாகவே பார்க்கப்படுகிறோம். ஆனால் நாங்கள் இந்த போட்டிக்கு முழு வீச்சில் தயாராக உள்ளோம். எங்கள் அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். மேலும் வேகப்பந்துவீச்சாளர் பரூக்கி இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.இதனால் சுழல் வேகம் என இரண்டு விதத்திலும் நாங்கள் முழு பலத்தோடு இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

