தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் 13வது போட்டியில் இன்று நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஆப்கான் அணியின் துவக்க வீரர்களான ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரான் இருவரும் மிகச் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அந்த அணியினர் முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்த நிலையில் இப்ராஹிம் ஜத்ரான் 28 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து ரஹ்மத் ஷா 3 ரன்களில் அதில் ரஷீத் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரஹ்மத்துல்லா குர்பாஸ் 57 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி சிறிய சரிவை சந்தித்தது. அந்த அணியின் கேப்டன் ஹ்ஸ்த்துல்லா ஷஹீதி 14 ரன்களிலும் உமர் சாய் 19 ரன்களிலும் முகமது நபி 9 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர், இன்றைய போட்டியில் களம் இறங்கிய விக்கெட் கீப்பர் விக்ரம் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தார். அவர் 66 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2ரண்டு சிக்ஸர்கள் அடித்து 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின் வரிசையில் ரஷீத் கான் 23 ரன்களும் முஜிபுர் ரஹ்மான் 28 ரன்களும் அதிரடியாக எடுக்க ஆப்கானிஸ்தான்49.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஆதில் ரசீது 3 விக்கெட்டுகளும் மார்க் வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியினர் ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர் பெர்ஸ்டோ 2 ரன்களிலும் ஜோ ரூட் 11 ரன்களிலும் ஆட்டம் இழக்க இங்கிலாந்து அணி அதிர்ச்சியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த டேவிட் மலான் 32 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் பட்லர் 9 ரன் லிவிங்ஸ்டண் 10 ரன் மற்றும் சாம் கரன் 10 ரன் என ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் மாயாஜாலத்தில் வெளியேற இங்கிலாந்து அணி அதல பாதாளத்தில் சென்றது.
அந்த அணியின் ஹாரி புரூக் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தார். அவர் 61 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 66 ரன்களில் ஆட்டம் விளக்க இங்கிலாந்து அணியின் தோல்வி உறுதியானது. இறுதியாக கிறிஸ் ஓக்ஸ் 9 ரன்களிலும் ஆதில் ரஷீத் 20 ரன்களிலும் மார்க் வுட் 18 ரன்களிலும் ஆட்டம் இழக்க டாப்ளி 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் 215 ரன்கள் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் முஜிபுர் ரஹ்மான் மூன்று விக்கெட்டுகளும் ரஷித் கான் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தினர. முகமது நபி இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். நவீன் உல் ஹக் மற்றும் பாரூக்கி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்த தொடரில் நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் தோல்வியை சந்தித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றியை தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் மேல் வரிசையில் எந்த மாற்றங்களும் இல்லை. ஆனால் கீழ் வரிசையில் எட்டாவது இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மேலும் ஒன்பதாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி 10வது இடத்திற்கு பின்தங்கி சென்று இருக்கிறது. நாளை நடைபெற உள்ள இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுமா என ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

