இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
ஹைதராபாத்தில் நடைபெறும் இப்போட்டியில் வலுவான சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்துவார்களா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. பேட்டிங்கை விடவும் பந்துவீச்சில் வலிமை குறைந்த அணியாக தற்போது ஆர்சிபி திகழ்கிறது.
பெங்களூர் அணிக்கு எதிராக களமிறங்கும் ஒவ்வொரு அணியும் வெற்றி இலக்காக 200 ரன்களுக்கும் குறைவில்லாமல் நிர்ணயித்து விடுகிறது. காரணம் அந்த அணியில் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாததும், மேலும் முக்கியமாக தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்து வருகிறது.
ஆர்சிபி அணியின் ஆஸ்தான சுழற் பந்துவீச்சாளரான சகாலை 2022ஆம் ஆண்டு விடுவித்து தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டிக்கொண்டது பெங்களூர் அணி. 2011ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கிய சகால், அதற்குப் பிறகு 2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வந்தார். அதன்பிறகு 2022 ஆம் ஆண்டு பெங்களூரு அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கிக் கொண்டது.
சமீபத்தில் 200 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சகாலை ஆர்சிபி அணியில் இல்லாதது வேதனைக்குரிய விஷயமாக இருப்பதாக முன்னாள் ஆர்சிபி வீரர் டிவிலியர்ஸ் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“ஆர்சிபி அணியால் விடுவிக்கப்பட்ட சகாலை நினைத்துப் பார்க்கும்போது அந்தத் தருணம் ஹார்ட் பிரேக்கிங் ஆக உள்ளது. எனினும் அவரது விளையாட்டு ராஜஸ்தான் அணிக்கு நல்ல முறையில் இருக்கிறது. அவர் ஆர்சிபி அணியில் இருந்து விடுவித்தது ஒரு பைத்தியக்காரத்தனமான செயலாகும்.
அவர் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைக்கும் போது ஆர்சிபி அணிக்காக விளையாடாமல் போனது வருத்தமாக உள்ளது என்ற தனது யூ டியூப் சேனல் மூலம் தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சவால் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அடி தூள்.. ஓய்விற்குப் பிறகு தோனிக்கு கிடைக்கவிருக்கும் புதிய பொறுப்பு.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே
தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூர் அணி இன்று நடைபெற உள்ள ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களமிறங்குகிறது. இனி வரும் அனைத்து போட்டிகளில் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்வது குறித்து நினைத்துப் பார்க்க முடியும். எனவே இந்தப் போட்டி ரசிகர்களுக்கு அனல் பறக்கும் விருந்தாக அமையும் என்பது சந்தேகம் இல்லை.

