சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் தற்போது முதல் இடத்தில் நுழைந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.
பின்னர் குஜராத் அணியுடன் இரண்டாவது ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இரண்டு வெற்றிகளுடன் தற்போது முதல் இடத்தில் உள்ளது. மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிதற்குப் பிறகு அவரது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் புதிய கேப்டனான ருத்ராஜ் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.
ஆட்டத்தின் போது தன்னிச்சையாக முடிவுகளை எடுக்காமல் இக்கட்டான சூழ்நிலைகளில் தோனியுடன் கலந்து ஆலோசித்து விட்டே முடிவுகளை எடுக்கிறார். இப்படி கேப்டன்சியிலிருந்து விட்டு விலகி அணியில் ஒரு வீரராக நீடித்தாலும் சென்னை அணிக்கு அவரது பங்களிப்பு தொடர்ந்து தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே சென்னை அணியின் அடையாளமாகவே மாறிவிட்ட மகேந்திர சிங் தோனி கேப்டனாக ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்து விட்டார். எனவே அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முன்பு ருத்ராஜ் அவருக்காக ஒரு கோப்பையை வென்று தரவேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு சென்னை அணிக்காக அறிமுகமாகிய இந்திய முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சென்னை அணிக்காக விளையாடிய காலகட்டத்தில் இருந்து அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவார். இவரது பதிவுகள் சென்னை ரசிகர்களின் மத்தியில் பெரும் கவனம் பெறும். இந்நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற மஞ்சுமேல் பாய்ஸ் படத்தினை மேற்கோள் காட்டி தோனிக்கு புகழாரம் சூட்டி ஒரு பதிவை வைத்திருக்கிறார்.
அதில் “தமிழ்நாட்டு மக்களை “மஞ்சள் மேல்” பாய்சாக மாற்றிய எங்கள் தல தோனியே. வெற்றி உன் மேல் கொண்ட காதல் எதையும் தாண்டி புனிதமானது.வெற்றி மகுடம் சூட காத்திருப்போர் மத்தியில் வெற்றிக்கு மகுடமாக எப்போதும் நீ சிங்கம்தான். இம்முறையும் @ChennaiIPL க்கு வெற்றி முகமே. என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக வைரலாகி வருகிறது.
சென்னை அணியில் விளையாடும் வீரர்களுக்கு எப்போதும் சென்னை ரசிகர்கள் மீதும் சென்னை அணியின் மீதும் ஒரு தீராத காதல் இருக்கும். அந்தக் காதலுக்கு எடுத்துக்காட்டுதான் ஹர்பஜன் சிங், டு பிளஸ்சிஸ், ஷேன் வாட்சன் போன்றவர்கள். இவர்கள் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் சென்னை அணிக்கும் இவர்களுக்குமான தொடர்பு எப்போதுமே இருக்கும்.
தமிழ்நாட்டு மக்களை "மஞ்சள் மேல்" பாய்சாக மாற்றிய எங்கள் தல தோனியே. வெற்றி உன் மேல் கொண்ட காதல் எதையும் தாண்டி புனிதமானது.வெற்றி மகுடம் சூட காத்திருப்போர் மத்தியில் வெற்றிக்கு மகுடமாக எப்போதும் நீ சிங்கம்தான். இம்முறையும் @ChennaiIPL க்கு வெற்றி முகமே #CSKvsGT#ipl #CSK
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 26, 2024

