இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி வெல்வதற்கு 608 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி வெறும் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக 93 ஆண்டு கால எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணி முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.
ஆட்டநாயகன் விருது
இந்திய அணியின் ஆகாஷ் தீப் இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். பும்ரா இல்லாமல் இந்திய அணி வென்றிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் விளாசிய சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் என்ன பேசினோமோ அதனை சரி செய்திருக்கிறோம். குறிப்பாக பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் அசத்திவிட்டோம். இதுபோன்ற பிட்சில் 400 முதல் 500 ரன்களை விளாசிவிட்டால், ஆட்டத்திற்கு வர முடியும் என்று தெரியும். அதேபோல் ஒவ்வொரு முறையும் நாங்கள் கேட்ச்களை கோட்டைவிடப் போவதில்லை.
சுப்மன் கில் பதிலடி
ஆகாஷ் தீப் இதயத்தில் இருந்து பவுலிங் செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் பிட்ச் செய்த லெந்த் அசத்தலாக இருந்தது. அவரால் பந்தை இரு பக்கங்களிலும் ஸ்விங் செய்ய முடிகிறது. இதுபோன்ற பிட்சில் அப்படி செய்வது எளிதான விஷயமல்ல. என்னுடைய பேட்டிங்கை பொறுத்தவரை, மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். எனது பங்களிப்புடன் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றால் மகிழ்ச்சியாக இருப்பேன்.
ஏற்கனவே சொன்னதை போல், களத்தில் இறங்கிவிட்டால் பேட்ஸ்மேனாக மட்டுமே சிந்திப்பேன். அடுத்த போட்டியில் நிச்சயமாக பும்ரா வந்துவிடுவார். லார்ட்ஸ் மைதானத்தில் விளையாட ஆர்வமாக உள்ளேன். கிரிக்கெட் உலகின் மிக முக்கியமான மைதானங்களில் ஒன்றாக இருக்கிறது. ஒரு குழந்தையாக அங்கு விளையாடுவது கனவாக இருந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

