இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாம் மைதானத்தில் நாளை மறுநாள் நடக்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் ஜடேஜா நீக்கப்பட்டு அவரது இடத்தில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹர்ப்ரீத் ப்ரார் ஷாக்
அதேபோல் பும்ரா விளையாட மாட்டார் என்று கூறப்பட்டாலும், அவர் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் பும்ராவை சேர்ப்பது தொடர்பாக கடைசி நேரத்திலேயே முடிவு எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் திடீரென பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்பின்னரான ஹர்ப்ரீத் ப்ரார் இந்திய அணியின் பயிற்சி முகாமில் இருந்தார்.
இந்திய டெஸ்ட் அணியில் ஹர்ப்ரீத் ப்ரார் தேர்வு செய்யப்படாத போது, அவர் எப்படி லண்டன் வந்தார் என்பது கேள்வியாக இருந்தது. இந்த சூழலில் ஹர்ப்ரீத் ப்ரார் இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு வந்தது தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ஐபிஎல் தொடருக்கு பின், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
சுப்மன் கில் மெசேஜ்
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் நடக்காததால், குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹர்ப்ரீத் தனது மனைவியை சந்திப்பதற்காக இங்கிலாந்தில் இருந்திருக்கிறார். அவர் இருக்கும் இடத்தில் இருந்து இந்திய அணி பயிற்சி மேற்கொள்ளும் பர்மிங்ஹாம் மைதானத்திற்கு சுமார் 1 மணி நேரத்திற்குள் வர முடியும்.
ஹர்ப்ரீத் ப்ரார் அங்கு இருப்பதை அறிந்த சுப்மன் கில், உடனடியாக அவருக்கு மெசேஜ் செய்து பயிற்சி முகாமிற்கு அழைத்துள்ளார். இதனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு அவர் சிறிது நேரம் பயிற்சியின் போது பவுலிங் செய்திருக்கிறார். இதன் மூலமாக ஹர்ப்ரீத் ப்ரார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முன்னிலையில் தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அமைந்துள்ளது.

