டி20ஐ தொடரை 4-1 என ஆதிக்கத்துடன் கைப்பற்றிய இந்தியா அடுத்ததாக ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் அமர்க்களமான வெற்றியுடன் முன்னிலை வகிக்கிறது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் மீண்டும் வந்து தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொண்டார். விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, ஷமி ஆகிய சீனியர் வீரர்களும் அணிக்குத் திரும்பியுள்ளனர். இன்னும் 10 நாளில் துவங்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பு இந்த இங்கிலாந்து தொடர் சரியான பயிற்சியாக அமையும்.
இந்திய அணியில் கடைசி நேரத்தில் காலில் ஏற்பட்ட காயத்தால் விராட் கோலி அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாகத் தான் ஷ்ரேயாஸ் ஐயர் இன்று விளையாடியுள்ளார். இந்திய அணி விரைந்து 2 விக்கெட்டுகளை இழந்த போது, அழுத்தத்தை உள்வாங்கி நிலைத்து நின்று இங்கிலாந்து பந்து வீச்சாளர்களைச் சரமாரியாகத் தாக்கினார் ஐயர்.
36 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர் என 59 அதிரடியான ரன்களை அடித்தார் ஐயர். 19/2 என்ற நிலையில் கூட அடித்து ஆடி அணியை சீரான பாதைக்கு அழைத்துச் சென்றார். என்னதான் இறுதிவரை நின்று ஆடி கில் 87 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதுப் பெற்று இருந்தாலும், ஐயரின் அதிரடி ஆட்டம் இன்று பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்திய அணிக்காக கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடி அணிக்கு முக்கிய பங்களிப்பாக திகழ்ந்தார். மேலும், இந்திய அணிக்கு மிகவும் சிக்கலாக இருக்கும் நம்பர் 4 இடத்துக்கு சரியான தீர்வாக ஐயர் அமைந்தார். ஆனாலும் அவரை அவ்வப்போது இந்தியா அணியில் இருந்து விலக்கி விடுகிறார்கள். இன்று கூட கோலி ஆடததால் தான் ஐயர் விளையாடியுள்ளார்.
போட்டி முடிவடைந்த பிறகு இதனை அவரே குறிப்பிட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு நன்றாக ஆடிய இவரை சரியாக நடத்தாதது பெரிய தவறு என பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மேல் இந்திய ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நல்ல வேளை, இந்த கிடைத்த வாய்ப்பை ஐயர் சரியாக பயன்படுத்திக் கொண்டதால் அவரின் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளார்கள். அடுத்தப் போட்டியில், கோலி திரும்பும் பட்சத்தில் ஐயர் அணியில் இருந்து நீக்கபட்டால் சமூக வலை தளத்தில் ரசிகர்கள் திட்டித் தீர்த்து விடுவார்கள்.

