ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா, கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார்.
நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் மற்றும் மெல்போர்ன் டெஸ்ட் ஆகியவற்றில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. பிரிஸ்பேன் போட்டியில் மழை பெய்ததால் இந்திய அணி காப்பாற்றப்பட்டது.
இந்த சூழலில் ரோகித் சர்மாவின் பேட்டிங்கும் இந்திய அணிக்கும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கடந்த 5 இன்னிங்ஸில் மொத்தமாகவே 31 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். இதனால் சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தகவல் தெரிவிக்கின்றன.
ரோகித் சர்மா அணியில் ஒரு சாதாரண வீரராக கூட இடம்பெறவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மாவுக்கு பதில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் கில் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று இந்திய அணியின் அனுபவ வீரர் கே எல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கப் போகிறார். ஆகாஷ் தீப் காயம் காரணமாக விலகி உள்ள நிலையில் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இதேபோன்று கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஷார்ட் ஆடி ஆட்டம் இழந்த உடன் ரிஷப் பன்ட் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. பும்ரா கேப்டனாக செயல்பட்டு இந்திய அணி பெர்த் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்ற நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
சிட்னி ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என தெரிகிறது. இனி இந்திய அணி அடுத்ததாக ஜூன் மாதம் தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் என்பதால் ரோகித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.

