டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் பும்ரா நான்கு ஓவர்களில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் மேலும் ஒரு தனி சாதனையை படைத்திருக்கிறார்.
ஆன்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் இந்திய அணி பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். கடந்த போட்டிகளை காட்டிலும் ஓரளவு நன்றாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்து வெளியேறியது. ரோகித் சர்மா 23 ரன்களில் வெளியேற, விராட் கோலி 37 ரன்களில் வெளியேறினார்.
அதற்குப் பிறகு களம் இறங்கிய பண்ட் 36 ரன்களும், சிவம் துபே 34 ரன்களும் குவித்தனர். பின்னர் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. வங்கதேச அணித்தரப்பில் டான்சின் ஓரளவு நன்றாக பந்து வீசி இரண்டு பிக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதற்குப் பின்னர் வங்கதேச அணி வெற்றி இலக்கை நோக்கி விளையாடியது. தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணியினர் வங்கதேச அணியினரை அவ்வளவு எளிதில் ரன்கள் குவிக்க விடவில்லை. வங்கதேச பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தனர். அதிகபட்சமாக வங்கதேச அணியின் கேப்டன் ஷான்டோ 32 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 40 ரன்கள் குவித்தார்.
இறுதியில் வங்கதேச அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் நான்கு ஓவர்களில் 19ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் பும்ரா நான்கு ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரு புதிய சாதனையையும் படைத்திருக்கிறார்.
இதையும் படிங்க:வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு.. புதிய சாதனை படைத்த விராட் கோலி.. உலகக்கோப்பையில் புது வரலாறு
அதாவது பும்ரா டி20 உலக கோப்பை பொறுத்தவரை இதுவரை ஆறு முறை நான்கு ரன்களுக்கும் கீழ் விட்டுக் கொடுத்திருக்கிறார். இந்த வகையில் பும்ரா சிறப்பான ஒரு தனி சாதனையை படைத்திருக்கிறார். சவுதி, நோக்கியா, அஜந்தா மென்டிஸ் மற்றும் வெயின் பர்னல் இதுவரை ஐந்து முறை நான்கு ரன்களுக்கும் கீழ் விட்டு கொடுத்திருக்கின்றனர்.

