ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்து அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது.
அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் பாகிஸ்தான் அணி வெளியேறினாலும், அணியின் கேப்டன் பாபர் ஆஸம் மகேந்திர சிங் தோனியின் சாதனையை சத்தம் இல்லாமல் முறியடித்து இருக்கிறார்.
ஃப்ளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி பாகிஸ்தான் அணியினரின் அபாரமான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே குவித்தது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக டிலானி 31 ரன்களும், ஜோஸ்வா லிட்டில் 22 ரண்களும் குவித்தனர்.
இதில் பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது ஆமீர், இமாத் வாசிம் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இதை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. 107 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ரிஸ்வான் 17, ஆயுப் 17, பக்கார் ஜமான் 5, சடாப் கான் 0, இமாத் வாசிம் 4 என முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.
இதனால் 62/6 என்ற நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் அணியை கேப்டன் பாபர் ஆஸம் சிறப்பாக விளையாடி அணியை கரை சேர்த்தார். நங்கூரமாக விளையாடிய அவர் 32 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவருக்கு பக்கபலமாக அப்பாஸ் அப்ரிடி 17 ரன்களும் சாகின் அப்ரிடி 13 ரன்களும் குவித்து உறுதுணையாக இருந்தனர். இதனால் 19 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனியின் சாதனையை தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் முறியடித்து இருக்கிறார். இந்தப் போட்டியில் அவர் அடித்த 32 ரன்களையும் சேர்த்து டி20 உலக கோப்பையில் கேப்டனாக பாபர் ஆசம் 549 ரன்கள் குவித்திருக்கிறார். இதன் மூலமாக இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை தற்போது பாபர் ஆசம் முறியடித்து இருக்கிறார்.
இதற்கு முன்னர் 2007ம் ஆண்டில் இருந்து 2016ஆம் ஆண்டு வரை மகேந்திர சிங் தோனி குவித்த 529 ரன்கள் கேப்டனாக ஒரு வீரர் குவித்த அதிகபட்ச ரன்கள் ஆக இருந்தது. அதற்கு அடுத்ததாக நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 527 ரன்கள் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். தற்போது இவர்களது சாதனையை பாகிஸ்தான அணியின் கேப்டன் முறியடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க:ரோஹித், கோலி இல்லை.. இவர்தான் ரியல் இன்ஸ்பிரேஷன்.. இந்திய வீரரை பாராட்டும் பதான்
பாகிஸ்தான் அணி இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் வெளியேறினாலும் எம் எஸ் தோனியின் சாதனையை பாபர் ஆஸம் முறியடித்திருப்பது தற்போது ரசிகர்கள் இடையே கவனத்தைப் பெற்று வருகிறது.

