13 வது உலகக் கோப்பை தொடரின் 12 வது போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை வெளியானதில் இருந்தே இந்தப் போட்டிக்காக உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தவம் இருந்தனர். இந்நிலையில் இந்தப் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் அடுத்த 36 ரன்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அதிகபட்சமாக 50 ரன்கள் மற்றும் முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்திய அணி இரண்டாவது பேட்டிங்கில் 30.3 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 63 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் எட்டாவது முறையாக உலகக்கோப்பைகளில் இந்தியா, பாகிஸ்தானை தோற்கடித்து இருக்கிறது.
இந்தப் போட்டி தொடர்பாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியிருக்கும் கருத்துக்கள் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக இருக்கிறது. இவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிராக நேரடியாகவே தனது கேள்விகளை முன் வைத்திருக்கிறார். இவரது பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகியிருக்கிறது .
இது தொடர்பாக பேசியிருக்கும் மிக்கி ஆர்தர்” இந்த உலகக் கோப்பை போட்டிகளை ஐசிசி நடத்துவது போல் தெரியவில்லை. பிசிசிஐ நடத்துவது போல் தான் இருக்கிறது. இந்த உலகக்கோப்பை போட்டி இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெறும் தொடர் போல இருக்கிறது . பாகிஸ்தான் அணியின் பாடல் ஆன தில் தில் பாகிஸ்தான் மிகவும் குறைவாகவே மைதானத்தில் ஒலிக்கப்பட்டது” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர்” இதை நான் ஒரு குறையாகவோ அல்லது நாங்கள் தோல்வியடைந்ததற்கு காரணமாகவோ கூறவில்லை. எங்களது முழு கவனமும் போட்டியில் தான் இருந்தது. அடுத்த பத்திரிக்கை எவ்வாறு திட்டங்களை வகுப்பது மற்றும் இந்திய வீரர்களை எவ்வாறு சமாளிப்பது என்பதில்தான் கவனம் செலுத்தினோம்” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்த போட்டி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்” இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடியது. அவர்கள் ஒரு சிறந்த அணியாக இருக்கிறார்கள். ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் அணியை திறம்பட வழி நடத்தினார்கள். இந்திய அணி அனைத்து துறைகளிலும் உலகக் கோப்பைக்கு தயாரான வகையில் வந்திருக்கிறது. அவர்களை இறுதிப்போட்டியில் சந்திக்க ஆர்வமாக இருக்கிறோம்” என தெரிவித்திருக்கிறார்.

